காட்மாண்டு: நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க தவறியதால் கே.பி.சர்மா ஒளி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி.சர்மா ஒளி தலைமையிலான அரக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10ம் தேதி நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி.சர்மா ஒளி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை அதிபர் பித்யா தேவி பண்டாரி கெடு வழங்கினார். ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. எனவே நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒளியையே அதிபர் மீண்டும் நியமித்தார்.
அதன்படி அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். மேலும் 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் கே.பி.சர்மா ஒளி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளார். 271 உறுப்பினர் நாடாளுமன்றத்தில் ஔி தலைமையிலான சி.பி.என்-யு.எம்.எல். கட்சிக்கு 121 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் பெரும்பான்மை பெற 136 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.