தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஒக்சிஜன் மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் பலர் ஒக்சிஜன் இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஒக்சிஜன் பற்றாக்குறையை போக்க அண்டை மாநிலங்களில் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து ஒக்சிஜனை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் சென்னை நோக்கி வருகிறது. இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
4 பெரிய கண்டெய்னர்களில் 80 மெட்ரிக் டன் எடையுள்ள திரவ ஒக்சிஜனுடன் வரும் அந்த ரயில் தண்டையார்பேட்டைக்கு வர உள்ளது. பின்னர் தேவையான பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும்.
ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் 100 சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இவற்றின் மூலம் இதுவரை 2 ஆயிரத்து 620 மெட்ரிக் டன் ஒக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.