இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் போக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உச்சமடைந்தது. தமது அரசியல் தலைமையகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று ரொக்கட் தாக்குதல் நடத்தினர்.
தற்போதைய மோதல் நிலைமைகளின் விளைவுகளிற்கு தாம் பொறுப்பல்ல, இஸ்ரேலே காரணம் என ஹமாஸ் தலைவர் கூறியுள்ளார். போராளி குழு “மிக அதிக விலை கொடுக்கும்” என்று இஸ்ரேலிய பிரதமர் எச்சரித்துள்ளார்.
கத்தார், எகிப்து மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை அமைதியாக இருக்க வேண்டும் என்று இரு தரப்பையும் கோரின. ஆனால் ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹனியே ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார்: “அவர்கள் அதிகரிக்க விரும்பினால், எதிர்ப்புக்கு தயாராக உள்ளோம். அவர்கள் நிறுத்த விரும்பினால். நாமும் நிறுத்த தயாராக இருக்கிறோம்“ என தெரிவித்தார்.
முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா பகுதியில் உள்ள போராளிகள் “மிக அதிக விலை கொடுப்பார்கள்” என்று எச்சரித்தார். 1967 போரில் கிழக்கு ஜெருசலேம் கைப்பற்றப்பட்டதை நினைவுகூரும் இஸ்ரேலில் ஒரு விடுமுறை நாளில் ஹமாஸின் ரொக்கட் தாக்குதலை தொடர்ந்து இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
டெல் அவிவ் நோக்கி ஹமாஸ் அமைப்பினர் 130 ரொக்கெட்டுகளை வீசினர். இதில் 3 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹாமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், உயர் சேதம் தவிர்க்கப்பட்டது. காசா டவர் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ரொக்கெட்டுகளை ஏவியது.
இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது. ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகங்களில் விழுந்தன. இதில் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது. ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், இஸ்ரேலின் லோட் நகரில் வன்முறை வெடித்துள்ளது. லோட் நகரில் இஸ்ரேலிய யூதர்களும், அரேபியர்களும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், காசா மற்றும் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேலிய யூதர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்வேறு வீடுகள், கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த சம்பவங்களால் லோட் நகரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அவசரநிலை பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அறிவித்தார்.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசாருக்கு வன்முறையை கட்டுப்படுத்துவதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் உதவிகரமாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் லோட் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
ஹமாஸ் – இஸ்ரேல் படைகள் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேலின் லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வரும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
இதற்கிடையில், ஹமாஸின் ரொக்கட் தாக்குதலிற்கு பதிலடியை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
டெல் அவிவ் நோக்கி ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசிய பின்னர், காசாவில் பாலஸ்தீனிய இலக்குகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் “ஒரு ஆரம்பம்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காண்ட்ஸ் கூறினார்.
காசாவில் தாக்க “பல இலக்குகள் உள்ளன” என்று காண்ட்ஸ் கூறினார்.
“இது ஒரு ஆரம்பம். பயங்கரவாத அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, இஸ்ரேலைத் தாக்கும் முடிவின் காரணமாக அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.