காரைதீவு என்பது 65 வீதம் தமிழர்களும், 35 வீதம் முஸ்லிம்களும் வாழும் பிரதேசம். இந்த பிரதேசத்தில் மதுபான சாலையொன்று அமைந்துள்ளது.அதனூடாக பல கலாச்சார சீர்கேடுகள், பல்வேறுபட்ட விபத்துக்கள், பல்வேறுபட்ட இன முறுகல்கள் வர வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் கோயில் தர்மகத்தாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், தேவாலய பாதிரியார்கள் என நாங்கள் எல்லோரும் ஒருமித்து பல்வேறு முன்னெடுப்புக்களை செய்து கொண்டிருக்கிறோம். அந்த மதுபான சாலைக்கு அருகில் அமைந்துள்ள காணிகளில் குடிவெறியில் பல அநாகரியமான சம்பவங்கள் நடைபெறுவதாக அறிகிறோம் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தெரிவித்தார்.
இன்று (12) காரைதீவு பிரதேச சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸ், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகிய அனைவரும் இணைந்து போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் நாங்கள் எழுத்துமூலம் அறிவித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை பொலிஸார் எடுத்து வருகிறார்கள்.
தற்போது எமது நாட்டில் பரவலாக நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக எமது பிரதேசத்தின் எல்லைப்பகுதிக்குள் நடமாடும் வெளியூர் அங்காடி வியாபாரிகள் , வெளியூர் மீன் வியாபாரிகள் , பிளாஸ்ரிக், இரும்பு பொருட்கள் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் அனைவரும் தற்போதைய காலப்பகுதிகளில் எமது பிரதேச எல்லைக்குள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. என்பதுடன் கொரோனா அச்ச நிலையினை கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை இந்நடைமுறை அமுலில் இருக்கும் என்பதனையும் அறிவிக்கிறேன்.
இதனை மீறும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றேன். மேலும் மாலை 06.00 மணிக்கு பிறகு கூட்டங்கள் கூடுவது, களியாட்டங்களில் ஈடுபடுவது, வர்த்தக வியாபாரங்களை செய்வதை மறு அறிவித்தல் வரை அமுல்படுத்துகிறோம் என்றார்.