உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ், இலங்கைக்கு தேவைப்படும் 6 இலட்சம் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பார் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவன தலைவருடன் சூம் தொழிநுட்பம் மூலம் கலந்துரையாடலில் ஈடுபட்டதை தொடர்ந்து ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாவது டோஸை பெற்றுக் கொடுப்பதற்காக உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கான தேவை நிலவுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது, சீனாவின் சினோ ஃபார்ம் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த இன்னும் 2 – 3 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தற்போது கையிருப்பில் உள்ள 6 இலட்சம் சினோ ஃபார்ம் தடுப்பூசிகளை கொண்டு இலங்கை மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொவிட் முதல் அலையினை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்கு தனது பாராட்டுக்களை உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்தாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய மற்றும் கொழும்பு அலுவலகத்தின் பணிகளுக்கு தனது பாராட்டுக்களை பதிவு செய்ததாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.