பாதியில் நின்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மீதி பகுதியை எங்கு நடத்துவது என்று பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று இடங்களில் ஒரு இடங்களை தேர்வு செய்து இந்த தொடர் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதி கட்டத்தை எட்டிய நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பாதி நிச்சயமாக இந்தியாவில் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்பதால் வேறு இடத்தில் தேர்வு செய்து இந்த தொடரின் மீதிப் பகுதியை நடத்த பிசிசிஐ தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. அந்த வகையில் பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா அல்லது ஐக்கிய அரபு அமீரகம் என மூன்று இடங்களில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு எஞ்சியுள்ள தொடரை நடத்த தீர்மானிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் இந்திய வீரர்களை வைத்து இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அந்த முடிவை பிசிசிஐ ஏற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் கிரிக்கெட் தொடர் என்பது வெளிநாட்டு வீரர்களும் சேர்ந்து விளையாட வேண்டிய தொடராகும். உள்ளூர் வீரர்களை மட்டும் வைத்து விளையாடினால் அது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரைப் போன்று இருக்கும். அதனால் இந்த ஆலோசனையை பிசிசிஐ கைவிட்டு விட்டது”என்றார்.
இதற்கிடையில் தற்போது பிசிசிஐக்கு இந்த தொடரை முழுமையாக நடத்தி முடிக்க மூன்று வழிகள் மட்டுமே உள்ளது. அதில் முதலாவது கடந்த ஆண்டைப் போல ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பாதுகாப்பு வளையத்துக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது. இரண்டாவது யுனைடெட் கிங்டம் எனப்படும் இங்கிலாந்தில் இந்த தொடரை நடத்துவது. டி20 உலக கோப்பை நடக்கவிருந்த ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை மாற்றி அங்கு எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிப்பது. இதில் எது நடைமுறைக்கு சாத்தியம் என்பதை பிசிசிஐ கூட்டம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதை நடைமுறைப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.