உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு பரவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவியது அனைவரும் அறிந்ததே. இந்த வைரஸின் முதல் அலை கடந்த ஆண்டு தாக்கிய நிலையில், நடப்பாண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இரண்டாவது அலை பரவி வருகிறது. அடுத்ததாக மூன்றாவது அலை நிச்சயம் வரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இரண்டாவது அலைக்கே தாக்குப் பிடிக்க முடியாமல் கொத்து கொத்தாக பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் மூன்றாவது அலையை நினைத்து பார்த்தாலே பதற வைக்கின்றது. இதற்கிடையில் இந்தியாவில் பரவி வரும் டபுள் மியூடண்ட் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ், சீனாவிலும் பலருக்கு பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் டெல்லியில் இருந்து காத்மாண்டு வழியாக மூன்று சீனர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் நொய்டாவில் உள்ள மொபைல் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காத்மாண்டுவில் 2 நாட்கள் தங்கிவிட்டு, அங்கிருந்து தென்மேற்கு சீனாவின் சாங்குயிங் நகருக்கு கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி போய் சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் அது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அது இந்தியாவின் டபுள் மியூடண்ட் கொரோனா வைரஸான B.1.617.2 வகையைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது. தற்போது வரை 18 பேருக்கு இந்த வைரஸ் பரவியிருக்கிறது. சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்தியாவின் டபுள் மியூடண்ட் வைரஸ் சீனாவில் ஏராளமானோருக்கு பரவியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும் கொத்து, கொத்தாக நோய்ப் பரவல் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் நாடு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.