நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் (40). தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுப்பாளரான கிளார்க் கைபோர்ட் (44) என்பவருடன் கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், கோடை காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வது என திட்டமிட்டு உள்ளார். எனினும், திருமண திகதியை அவர் வெளியிடவில்லை.
இதுபற்றி ஆர்டென் கூறும்பொழுது, திருமணத்திற்கான திகதி கிடைத்து விட்டது. இந்த அறிவிப்பினால் நாங்கள் அனைவரிடமும் திருமண தகவலை கூறிவிட்டோம் என்று அர்த்தமல்ல. அதனால், முறைப்படி அழைப்பு விட வேண்டும். எனினும், திருமண நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் மிக இளம் வயது பிரதமரான ஆர்டென் கடந்த 2017ஆம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்தபொழுது பிரதமர் பொறுப்பேற்று கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒக்டோபரில் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார்.



