நடமாடும் நகை கடை என்று சொல்லப்படும் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் 37,632 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அவர் 3வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
நடந்த சட்டமன்ற தேர்தலில் ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டு படை கட்சி 44 தொகுதிகளில் களமிறங்கியது. பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரிநாடார் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் களமிறங்கினார்.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மகனும் பிரபல வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் களமிறங்கினார். திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்எல்ஏவுமான பூங்கோதை ஆலடி அருணா களமிறங்கினார்.
ஹரி நாடாருக்கு பிரச்சாரத்தில் அதிக வரவேற்பு இருந்தது. அவர் உடலில் அணிந்திருந்த மூன்றரை கிலோ தங்கம் கூட அதற்கு காரணமாக இருந்தது. அவர் அணிந்திருந்த தங்கங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடியது. அதிலும் பெண்கள் கூட்டம் அதிகம் கூடியது.
பிரச்சாரத்தில் ஹரி நாடாருக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து மிரண்டுபோன ராக்கெட் ராஜா, ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஹரி நாடாருக்கு பிரச்சாரம் செய்தார். நகைகளை பார்க்கத்தான் கூட்டம் கூடுகிறது. ஆனால் இவை அத்தனை வாக்குகளாக மாறாது என்று அப்போது பலரும் சொல்லி வந்தனர். ஆனாலும் அத்தனையும் வாக்குகளாக மாறியது.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஹரிநாடார் மூன்றாவது இடத்தில் 37,632 வாக்குகளை பெற்றிருக்கிறார் ஹரிநாடார். நாம் தமிழர் கட்சி இத்தொகுதியில் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக அமமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. இடைத்தேர்தலிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்து, ஆலங்குளம் சட்டமன்ற தேர்தலிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது அவரது வளர்ச்சியை காட்டுகிறது.
மனோஜ் பாண்டியன் இத்தொகுதியில் வெற்றி பெற்று பூங்கோதையை வீழ்த்தியிருக்கிறார். ஹரி நாடாருக்கு கிடைத்திரும் வாக்குகளை பார்த்து மிரட்சி அடைந்திருக்கும் பூங்கோதை ஆதரவாளர்கள், இரண்டாவது இடத்திற்காவது வழிவிட்டாரே.. என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.