பாஜக வேட்பாளர் சந்தனா பவுரி மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கழிப்பறை வசதி கூட இல்லாத மண் குடிசையில் வாழும், தினக்கூலியாக வேலை பார்ப்பவரின் மனைவியான சந்தனா பவுரி, மேற்கு வங்கத்தின் சால்டோரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 30 வயதான சந்தனா பவுரி திரிணாமுல் கட்சி வேட்பாளர் சோன்டோஷ்குமார் மொண்டலை 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சந்தனாவின் வெற்றியைத் தொடர்ந்து, பலர் ட்விட்டரில், மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்து மகத்தான வெற்றி பெற்ற சந்தனா பவுரிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, சந்தனாவின் சொத்துக்கள் வெறும் ரூ 31,985 ஆகவும், அவரது கணவரின் சொத்துக்கள் ரூ 30,311 ஆகவும் உள்ளன. சந்தனாவின் கணவர் தினகூலிக்கு மேசனாக வேலை செய்கிறார். மூன்று குழந்தைகளின் தாயான சந்தனா, தனது கணவருடன் மூன்று மாடுகள் மற்றும் மூன்று ஆடுகளையும் வைத்திருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில் ஒரு ஊடகத்திடம் பேசிய அவர், “வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சட்டமன்றத் தேர்தலில் நான் ஒரு வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆன்லைனில் வேட்பு மனுவுக்கு விண்ணப்பிக்க பலர் என்னை ஊக்குவித்தனர். ஆனால் இந்த சாதனையை என்னால் அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை.” என்று கூறியிருந்தார்.இந்நிலையில் சந்தனாவின் வெற்றி அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக பலர் பாராட்டினர்.