மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை அண்மையில் அரச அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டு அவ்விடத்தில் பௌத்த மத்தியஸ்தானம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் றே;கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் அவ்விடம்; களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் உள்ளிட்ட பலரும் இவ்வியத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் மற்றும் சூழமைவுகள் தொடர்பில் இவர்கள் பார்த்து பரிசீலித்தனர். இப்பிரதேசம் பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருப்பதுடன் பல செதுக்கல்கள், படி அமைப்புகள் போன்றனவும் இங்கு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்;பிடத்தக்கது.
மேற்படி பிரதேசம் தொல்பொருள் சார்ந்த பிரதேசமாக இருந்தாலும், இதனை வைத்து இது பௌத்தத்திற்குரியது என்று சொல்லி பௌத்த விடயங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு அரசு செயற்பட முனையக் கூடாது, அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கக் கூடாது, அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்ற அடிப்படையில் ஊடகங்கள் வாயிலாக அவரவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.