மத்திய பிரதேசத்தில் உள்ள கணேஷ்புரா கிராமத்தில், நள்ளிரவில் ஒன்று சேர்ந்த கிராம மக்கள், கொரோனாவை விரட்ட, தீப்பந்தம் ஏந்தியபடி ‘கோ கொரோனா கோ’ என்று சொல்லியபடி ஓடினர். இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில், நேற்று ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை இதுபோல் வேறு எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கை அமல்படுத்தியதுடன், மாஸ்க் அணிவது கட்டாயம் எனவும் அறிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவை விரட்ட கிராம மக்கள் செய்த வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், அகர் மல்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா கிராமத்தை சேர்ந்த மக்கள், இரவு நேரத்தில் கைகளில் தீப்பந்தத்தை கொளுத்திய படி ஓடினர். அப்போது அனைவரும் ‘கோ கொரோனா கோ’ என ஹிந்தியில் கத்திக் கொண்டே ஓடுகின்றனர்.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், ‘கொரோனா காலத்தில், ஞாயிறு அல்லது புதன்கிழமையில், கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர், இவ்வாறு கையில் தீப்பந்தத்தை ஏந்தி கொண்டு, கிராம எல்லை வரை ஓட வேண்டும். பின்னர் அந்த தீப்பந்தங்களை எல்லைக்கு அப்பால் தூக்கி வீச வேண்டும். கொரோனாவிலிருந்து இது எங்கள் ஊரை காப்பாற்றும் என நாங்கள் நம்புகிறோம்’ என தெரிவித்தனர்.