மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணத்தை புறக்கணிப்பது என்று மீனவ கிராம பஞ்சாயத்தார் முடிவு செய்துள்ளனர்.
காலம் காலமாக சில கிராமங்களில் வித்தியாசமான நம்பிக்கைகள் கடைப்பிடிப்படுகின்றன. இதற்காகவே, கிராமத்தில் கூட்டம் போட்டு ஊர் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த நம்பிக்கைகள் பலருக்கு விசித்திரமாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களிற்கு அது சரித்திரமாகவே இருக்கும்.
அந்தவகையில் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கத்தை கடைப்பிடிக்க மீனவ பஞ்சாயத்தார் கூட்டம்போட்டு வினோதமான முடிவு எடுத்துள்ளனர்.
காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான திருமண விழாக்களில் மணமகன்கள் முடிவெட்டாமல், தாடியை முழுமையாக சவரம் செய்யாமல் கலந்துகொள்கின்றனர்.
இது நமது பண்பாடு அல்ல, நமது பாரம்பரிய பண்பாட்டின்படி, திருமணத்தின்போது, தாடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே, பழைய பண்பாட்டு, பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில், இனிவரும் காலங்களில், திருமணத்தின்போது மணமகன் தாடி வைத்திருந்தால், அந்த திருமண விழாவை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.