கல்முனை தமிழ் பிரதேச செயலகம் மீளவும் உப பிரதேச செயலகமாக தரமிறக்கப்படுகிறது.
கல்முனை உப பிரதேச செயலகத்தை, தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு தமிழ் மக்கள் நியாயமான கோரிக்கையை பல ஆண்டுகளாக முன்வைத்து வந்தனர். எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் அது இதுவரை சாத்தியமாகவில்லை.
கடந்த நல்லாட்சி காலத்தில் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மு.காவினரின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில், நிர்வாக அதிகாரங்கள் இல்லாத நிலையிலும், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் என சம்பிரதாயபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
கணக்காளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கையெடுத்து, அதுவும் இழுபறியாகி, கடந்த ஆட்சியில் அதுவும் சாத்தியமாகாமல் போனது.
இந்த நிலையில், தற்போதைய அரசு பதவியேற்றதை தொடர்ந்து, தற்போது பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து கல்முனை பிரதேச செயலகத்திற்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என நாட்டப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றி, கல்முனை உப பிரதேச செயலகம் என புதிய பெயர்ப்பலகை நாட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.