பிரபல பின்னணி பாடகியின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின்பேரில் அவரது தங்கை குடும்பத்தினர் மற்றும் கிறிஸ்தவ மதபோதகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஒருவர் தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார். இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘எனது 15 வயது மகளிடம் சென்னைசாலிகிராமத்தில் உள்ள எனது தங்கை குடும்பத்தினர், கீழ்ப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ மதபோதகர் உள்ளிட்டோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், சிறுமிக்கு 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும், இந்த விவகாரம் சிறுமியின் சித்திக்கு தெரியும் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போக்சோ) கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஹென்றி, சிறுமியின் சித்தி கணவர்உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த4 பேரும் தலைமறைவாகினர். அவர்களை கைது செய்ய கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்து தனிப்படை போலீஸார் கூறியதாவது:
புகார் அளித்த பாடகிக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பாடகி தனது மகளை 6 வயது முதலே சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது தங்கை வீட்டில் விட்டு படிக்க வைத்துள்ளார். சித்தியின் அரவணைப்பில் சிறுமி இருந்துள்ளார். அப்போது பாடகியின் தங்கை கணவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சில ஆண்டுகளில் பாடகி தனது மகளை மீண்டும் தன் சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பாடகி தனது மகளை மீண்டும் சாலி கிராமத்தில் உள்ள தங்கை வீட்டில் விட்டு,விட்டு சினிமா, டிவி நிகழ்ச்சிகளுக்காக சென்றுள்ளார். இதை பயன்படுத்தி சிறுமியிடம் பாடகியின் தங்கை கணவர், அவரின் சகோதரி மகன் ஆகியோர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
பாடகியின் தங்கைக்கு அறிமுகமான கிறிஸ்தவ மத போதகர் ஹென்றி என்பவரும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியை மிரட்டியே வன்கொடுமை நடந்துள்ளது.
கரோனா பரவல் குறைந்தவுடன் மகளை மீண்டும் ஹைதராபாத்துக்கு பாடகி அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகுதான்சிறுமி தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதன் பின்னரே பாடகி புகார் அளித்துள்ளார். நாங்கள் நடவடிக்கையில் இறங்கினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.