அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து புரூக்ளின் சென்டர் பொலிஸ் தலைமை அதிகாரியும், துப்பாக்கியால் சுட்ட பெண் பொலிஸ் அதிகாரியும் தங்களது பதவியிலிருந்து விலகி உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை வீதியில் வாகனச் சோதனை நடைபெற்று கொண்டிருந்தபோது டான்ட் ரைட் (20) என்ற இளைஞனை அதிகாரிகள் இடைமறித்தனர். அவரது வாகனப் பதிவு ஏற்கனவே காலாவதியாகிவிட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகளால் காரை விட்டு
வெளியேற்றப்பட்ட அவருக்கு கைவிலங்கிட முயன்றனர்.
அப்போது அதனைத் தடுத்து காரில் ஏற முயன்ற இளைஞன் நெஞ்சில் சுடப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் கறுப்பின மக்கள் உள்ளிட்ட பலரை சினம் கொள்ளச் செய்தது.
அதனைத் தொடர்ந்து இரு நாட்களாக மினசோட்டாவின் ஆகப் பெரிய நகரான புளூக்ளின் சென்டரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இளைஞனை சுட்ட அதிகாரி 48 வயது பெண் பொலிஸ் அதிகாரியான கிம் போட்டர் ஆவார்.
சம்பவத்தை விசாரித்த தலைமை பொலிஸ் அதிகாரி டிம் கானன், சம்பவம் ஒரு விபத்து என்றும் மின்னதிர்ச்சி ‘டேசர்’ துப்பாக்கியை பணிக்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக தவறுதலாக உண்மையான கைத்துப்பாக்கியை அதிகாரி எடுத்துச் சென்று பயன்படுத்தியதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்த இரு அதிகாரிகளையும் பணி நீக்க நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக புரூக்ளின் சென்டர் மேயர் மைக் எலியட் கூறினார்.
அதனைத்தொடர்ந்து பொலிஸ் தலைமை அதிகாரி டிம் கேனனும் துப்பாக்கிச்சூடு நடத்திய கிம் போட்டரும் செவ்வாய்க்கிழமை பணி விலகல் கடிதத்தைக் கொடுத்தனர்.
இதில், கிம் போட்டர் நேற்று புதன் கிழமை மாலை கைது செய்யப்பட்டு, சில மணித்தியாலத்தில் விடுவிக்கப்பட்டார். ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.