பிரபல பாடகி ஒருவரின் மகள், உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது அவருக்கு பாதிரியார் மற்றும் உறவினர்கள் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த, பிரபல பின்னணி பாடகி, தன்னுடைய 15 வயது மகளை சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள தங்கையின் வீட்டில் பாதுகாப்பிற்காக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றிருந்தார். இந்தச் சூழலில் 15 வயது சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் தனியாக இருந்தபோது நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாடகி, என்ன நடந்தது என்று தங்கையிடம் கேட்டார்.
ஆனால் அவர் சரியான பதிலளிக்கவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த பாடகி, மகளை அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். இன்ஸ்பெக்டர் அமுதவள்ளியைச் சந்தித்து மகளுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறினார். இதையடுத்து பொலிஸாரும் பாடகியின் மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய உறவினர்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சர்ச்சிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த பாதிரியார், தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். அதை உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால்தான் அம்மாவிடம் விவரத்தைக் கூறினேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் பாதிரியார், பாடகியின் தங்கை கணவர், பாடகியின் தங்கை, உறவினர் ஆகிய 4 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து பொலிஸ் கூறுகையில், “நடிகர் விக்ரம் பிரபு நடித்த படத்தில் பிரபல பாடகி பாடியிருக்கிறார். அவரின் மகளை சாலிகிராமத்தில் உள்ள தங்கை வீட்டில் விட்டு விட்டு பாடகி வேலைக்குச் சென்றிருக்கிறார்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தங்கையின் உறவினர் மகன் அன்பாக பேசியிருக்கிறார். அதன்பிறகு அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். அடுத்து உறவினர் குடும்பத்தினருக்கு தெரிந்த பாதிரியாரும் சிறுமியிடம் அநாகரீகமாக நடந்திருக்கிறார். சிறுமி அளித்த தகவலின்படி 4 பேரிடம் விசாரணை நடத்தவுள்ளோம்” என்றனர்.