பளை பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில்
பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள்
விநியோகிக்கப்பட்டுள்ளன.
சமத்துவக் கட்சியின் சமூக பாதுகாப்பு பிரிவின் பச்சிலைப்பள்ளி கிளையினரால் மேற்படி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் பொது மக்களிடையே விநியோகிக்கப்பட்டு வருகிறது..
குறித்த துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
அபாயம் நம்மைச் சூழ்ந்துள்ளது. அழகான பச்சிலைப்பள்ளிக்கு ஆபத்து வந்துள்ளது. வளமான நம் பிரதேசம் வாழவே முடியாத அளவுக்கு அழிக்கப்படுகிறது.வளமான பச்சிலைப்பள்ளியின் வளமெல்லாம் கொள்ளையடிக்கப்படுகிறது.
கிளாலி தொடக்கம் இயக்கச்சி வரையில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு,
முகமாலை தொடக்கம் ஆனையிறவு வரையில் அரச காணிகள் அபகரிப்பு,
பச்சிலைப்பள்ளி எங்கும் கட்டற்ற வகையிலான காடழிப்பு, பளைப்
பிரதேசமெங்கும் பனை தறிப்பு, கடலோரக் காடுகளும் களப்பின் வளங்களும்
சிதைப்பு
இதெல்லாம் நம்முடைய கண்ணுக்கு முன்னே நடந்து கொண்டிருக்கும் அநியாயங்கள். அத்தனையும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள். ஒரு பிரதேசத்தை முற்றாகவே அழித்தொழிக்கும் காரியங்கள்.யுத்த காலத்தில் கூட இந்தளவுக்குப் பச்சிலைப்பள்ளியில் அழிவு நடக்கவில்லை.
இப்பொழுது அதிகாரத்தரப்புகளும் அரசியல் தரப்புகளும் இணைந்து இந்த அழிப்பைச் செய்கின்றன. இதில் தந்திரமாகக் கொள்ளை அடிக்கிறார்கள். இதற்குப் பின்னால் தீய சக்திகளே இயங்குகின்றன.
பச்சிலைப்பள்ளியில் பொது மக்களுக்கும் பொதுத் தேவைகளுக்குமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அரச (LRC) காணிகள் யாரென்றே முகம் காட்டாதவர்களுக்கெல்லாம் இரகசியமாகப் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள எமது மக்களில் பலருக்கு காணிகள் இல்லை. இதைப்பற்றி யாரிடம் முறையிடுவது? இதற்கு யார் தருவார் நீதி?
ஒரு பக்கம் எமது பிரதேசத்தில் மக்களின் காணிகளில் படையினர் நிலை
கொண்டுள்ளனர். ஆனால், அரச காணிகள் யார் யாருக்கோ என வெளிமாவட்டத்தில்
உள்ளவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த அநியாயத்துக்கு யார்
பதிலளிப்பது?
இந்தக் குறுகிய பிரதேசத்தில் மணலைத் தொடர்ந்து அகழ்ந்தால், நில அமைப்பு
மாற்றத்துக்குள்ளாகி, கடல் நீர் உட்புகக் கூடிய அபாயம் ஏற்படும். அது மட்டுமல்ல, மாரி காலத்தில் பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படக் கூடிய அபாயம் உண்டு. இவை இரண்டும் எமது பிரதேசத்தையே மக்கள் வாழ முடியாத நிலைக்குள்ளாக்கி விடும். ஆகவே இதை நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக நாம் ஒருங்கிணைவது அவசியம்.
இதையே நாம் சிந்திக்க வேண்டும். கேப்பாப்பிலவிலும் இரணை தீவிலும் மக்கள்
தங்கள் ஊர்களை மீட்டதைப்போல, நாமும் நமது நிலங்களையும் வளங்களையும்
காப்போம். எமது மரபு ரீதியான வாழிடத்தையும் வாழ்க்கையையும் மீட்டெடுப்போம். தாமதிக்க முடியாது. இன்றே செயலில்இறங்குவோம்.தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அழிவே நிகழும் என்பதை உணர்ந்து செயற்படுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.