யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இன்று (9) அதிகாலை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
யாழ் மாநகர காவல் பிரிவு எனும் பெயரில் அமைக்கப்பட்ட சுகாதார கண்காணிப்பு குழுவின் ஆடை, தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்த்துறையின் ஆடையை ஒத்திருந்தது, இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.
நேற்று மாலை யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் இருவரும் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு சென்ற இருவரிடமும், இந்த விவகாரம் இனிமேல் பயங்கரவாத தடுப்பு பிரிவினராலேயே கையாளப்படும் என பொலிசாரால் தெரிவிக்கப்பட்டது.
இருவரிடமும் இரவு 8 மணி முதல் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதிகாலை 2.30 மணியளவில் வி.மணிவண்ணனை கைது செய்யப் போவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, தன்னிடமிருந்த ஆவணங்கள், வாகன திறப்பு என்பவற்றை சக உறுப்பினர் பார்த்தீபனிம் அவர் கையளித்தார்.
உடனடியாகவே வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு பரிவினரால் வவுனியாவிற்கு அழைத்து செல்லப்பட்டார்.