Pagetamil
இலங்கை

மக்களிற்கு உண்மை தெரிந்து விடக்கூடாதென்பதாலேயே ஒருங்கிணைப்பு கூட்டங்களில் செய்தியாளர்களிற்கு தடை!

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் ஊடகவியலாளர்களின் அனுமதி மறுப்பானது பொது மக்கள் உண்மைச் செய்திகளை அறிந்து விடக்கூடாது என்பது மட்டுமல்லாது மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தையோ, அரச அதிகாரிகளையோ பொது வெளியில், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பிரச்சனைகளை கொண்டு வரக்கூடாது என்ற உண்மைகளை மறைக்கும் செயற்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள், மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட மாவட்ட, மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கும் சுற்று நிருபம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் இன்று மேலும் தெரிவிக்கையில்,

ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியுமென்றால், முடிவுகளை அறிவிக்க வேண்டுமென்றால் மக்கள் பிரதி நிதிகளை அழைக்கவும் தேவையில்லை.

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அழைக்க தேவையில்லை. மாவட்ட, பிரதேச அபிவிருத்தி விடயங்களை அதிகாரிகளுடன் பேசி விட்டு ஊடக சந்திப்பை நடாத்த முடியும்.

இது முற்றிலும் உண்மைகளை மறைக்கும் விடயமாகும். ஊடகவியலாளர்களின் தனித்துவமான, உண்மைச் செய்திகளை சேகரிக்கும் அவர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு சவால் விடுக்கும் செயற்பாடாகும். மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவர்கள் தவறாக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும், உண்மைகளை சொல்லாது விடப்படுவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கும்.

பாராளுமன்றத்தில் விவாதங்களை நேரலையாக ஒளிபரப்ப ஊடகங்கள் அனுமதிக்கப்படும் போது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க மறுக்கப்படுவது அரசாங்கத்தின் மீது சந்தேகத்தை தோற்று விக்கின்றது.

உள்ளூர் செய்தியாளர்களை சந்தேக கண்கொண்டு பார்க்கப்படுவது அவர்களின் நேர்மை, துணிச்சல், பக்கம்சாரா நடு நிலை மீது கை வைக்கும் ஓர் அரச அடக்கு முறையாகவே தெரிகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அமைச்சர்களையும் அரசாங்கத்தையும் கேள்வி கேட்கலாம் என்றால் அதை பொதுமக்கள் நேரலையாக பார்க்கலாம் என்றால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரச அதிகாரிகளையும் ஏன் கேள்வி கேட்க கூடாது.

ஏன் அதை மக்கள் ஊடகங்கள் ஊடாக, நேரலையாக உடனுக்குடன் பார்க்க கூடாது. சரிந்து போய்க்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஆதரவுத்தளம், மற்றும் மக்கள் எதிர்ப்பலைகள் அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்வதில் ஊடகங்களின் பங்கு தாக்கத்தை செலுத்துகின்றமையே உண்மையாகும்.

உண்மைகள் எழுதப்படும் போது, வெளிக்கொணரப்படும் போது மக்கள் விழித்தெழுவதும் மக்கள் மனங்களில் மாற்றம் வருவதும், அதனால் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாவதும், ஆளும் கட்சி எதிர்கட்சியாவதும் ஜனநாயக நடைமுறை மாற்றங்களாகும்.

எனவே ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் குரல் வளைகளை நெரிக்கும், சுதந்திரத்தை பறிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி உண்மைகளையும் பொய்யான விடையங்களையும் வெளி உலகுக்கும், மக்களுக்கும் கொண்டு சேர்க்க ஊடகங்களை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வீட்டிற்குள் நுழைந்த திருடனை கண்ட மூதாட்டி; திருடன் எடுத்த கொடூர முடிவு: யாழில் நடந்த பயங்கரம்!

Pagetamil

வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் இடம்கொடுக்க கூடாது – சி.வி.கே.சிவஞானம்

Pagetamil

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றதே – முன்னாள் எம்பி சந்திரகுமார்

Pagetamil

Leave a Comment