மிஸ் மியான்மர் பட்டம் வென்ற, ஹான் லே என்ற இளம்பெண் மியான்மர் இராணுவத்துக்கு எதிராக தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் பேசியது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் மியான்மர் இராணுவத்துக்கு எதிராக வலுவான குரலை அவர் பதிவு செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தாய்லாந்தில் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நஷனல் 2020’ அழகி போட்டியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது,
“இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மருக்கு உதவுங்கள். சர்வதேச உதவி மியான்மருக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிறது. சிறந்த உலகை உருவாக்குவோம்“ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
மியான்மர் இராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக ஹான் லே நாடு திரும்பாமல் தாய்லாந்திலே தங்கி இருக்கிறார்.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க இராணுவம் மறுத்தது.
இதுதொடர்பாக மியான்மர் அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில் அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் ஜனாதிபதி யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்தது. மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு இராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை அடக்க அந்நாட்டு இராணுவம் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது. 300 க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டு குடிமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.