24.7 C
Jaffna
January 28, 2025
Pagetamil
விளையாட்டு

இந்தியாவை நொறுக்கியது இங்கிலாந்து!

புனேயில் நேற்று பகலிரவாக நடந்த இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. 336 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 39 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்திய அணிக்கு சவாலாக பேட் செய்த பேர்ஸ்டோ 112 பந்துகளில் 124 ரன்கள் (7 சிக்ஸர்கள், 11 பவுண்டரி) குவித்தார். இவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்திய அணித் தரப்பில் போராடிய ராகுலின் சதம் வீணானது.

பேர்ஸ்டோ தொடக்கத்தில் நிதானமாக ஆடி அதன்பின் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். முதல் போட்டியில் சதத்தை தவறவிட்ட பேர்ஸ்டோ இந்தப் போட்டியில் அந்தத் தவற்றைச் செய்யவில்லை. 45 பந்துகளில் அரைசதம் அடித்த பேர்ஸ்டோ, 95 பந்துகளில் சதம் அடித்தார்.

மற்றொரு வீரரின் ஆட்டத்தையும் குறி்ப்பிடாமல் இருக்க முடியாது. பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸின் இயல்பான ஆட்டம் இதுதான் என்பதை நிரூபித்துவிட்டார். இந்தியத் தொடரில் இதுவரை சோபிக்காமல் இருந்த ஸ்டோக்ஸ் நேற்று நிரூபித்துவிட்டார். கடந்த ஐபிஎல் தொடரில் இதேபோன்ற ஆட்டத்தை ஸ்டோக்ஸ் வெளிப்படுத்தியிருந்தார் என்பது நினைவிருக்கும்.

இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை கிழித்து பென் ஸ்டோக்ஸ் தொங்கவிட்டார். களத்துக்கு வந்ததுமுதல் அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் 52 பந்துகளில் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

பென் ஸ்டோக்ஸ் பற்றி குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், 40 பந்துகளில் அரைசதம் அடித்த ஸ்டோக்ஸ், அடுத்த 11 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். 6,6,6,1,6,4,2,6,6,2,4, என இந்தியப் பந்துவீச்சை வெளுத்துக் கட்டிய ஸ்டோக்ஸ் சதத்தை நெருங்கிய நேரத்தில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்டநாயகன் விருதுக்கு ஸ்டோக்ஸும் தகுதியானவர் என்பதை மறுக்க இயலாது.

வலுவான பார்ட்னர்ஷிப்

2வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ கூட்டணி 175 ரன்கள் சேர்த்தனர். பேர்ஸ்டோ, ரோய் தொடக்க விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தனர். இந்த இரு பார்டன்ரஷிப்பும்தான் வெற்றியைக் கொண்டுவந்தது.

இங்கிலாந்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்து பிள்ளையார் சுழி போட்டவர் ஜேஸன் ரோய். பவர்ப்ளேயில் இங்கிலாந்து அணி 59 ரன்கள் சேர்த்தபோது, அதில் 39 ரன்கள் ஜேஸன் ரோய் அடித்திருந்தார். பேர்ஸ்டோ தொடக்கத்தில் நிதானமாக ஆடியபோது ஜேஸன் ரோய் இந்தியப் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினார். பிரசித் கிருஷ்ணா, புவனேஷ்வர் ஓவரில் பவுண்டரிகள் பறந்தன.

பேர்ஸ்டோ, ஜேஸன் ரோய் இருவரும் 13வதுமுறையாக சர்வதேச போட்டியில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இங்கிலாந்து ஜோடிகளில் இதுதான் அதிகமாகும்.இந்த 3 வீரர்களும்தான் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முழுமையாகக் காரணமாக அமைந்தவர்கள்.

கடந்த முதல் ஆட்டத்திலும் இதே கதைதான் நடந்திருக்கும், இந்திய அணிக்கும் இதே கதிதான் ஏற்பட்டிருக்கும். ஆனால், முதல் விக்கெட் பறிபோனபி்ன், நடுவரிசையில் பேட்ஸ்மேன்கள் ஒருவர்கூடநிலைத்து ஆடாமல் விக்கெட்டை இழந்தததுதான் இங்கிலாந்து தோல்விக்கு காரணம். ஏற்ககுறைய 116 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தனர்.

ஆனால், இந்தப்போட்டியில் அந்தத் தவறைச் செய்யவில்லை. விரைவாக விக்கெட்டுகளை இழக்காமல் கவனமாக ஆடிய இங்கிலாந்து அணியால் எளிதாக வெற்றியைத் தொட முடிந்தது.

பந்துவீச்சிலும் இங்கிலாந்து அணி ஓரளவுக்கு நன்றாகவே செயல்பட்டது. குறிப்பாக மொயின் அலி 10 ஓவர்கள் வீசி ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க விட்டு 47 ரன்கள் கொடுத்து கட்டுக்கோப்பாக வீசினார். சாம்கரன், டாப்ளே, ரஷித் மூவரும் 6 ரன்ரேட் அளவில்தான் விட்டுக்கொடுத்தாலும் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கேம் பிளான் தெளிவு

இங்கிலாந்து அணியின் “கேம் பிளான்” தெளிவாக இருக்கிறது. டி20, அல்லது ஒருநாள் போட்டி எதுவாக இருந்தாலும் நாங்கள் காட்டடி ஆட்டம்தான் ஆடுவோம், எதிரணியின் திட்டங்களை சிதறடித்து, குழப்பத்தில் நிற்க வைத்து வெற்றி பெறுவோம் என்பதுதான் அவர்களின் திட்டம். அதை ஒவ்வொரு போட்டியிலும் வெளிக்காட்டுகின்றனர். கடந்த போட்டியில் தோல்வியின் போதும் கப்டன் மோர்கன் இதேக் கருத்தைத்தான் வலியுறுத்தி இருந்தார்.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் மொத்தம் சிக்ஸர், பவுண்டரிகள் என மொத்தம் 34 அடித்திருந்தது. ஆனால், இந்த 34 பவுண்டரி, சிக்ஸர்களையும் இங்கிலாந்து அணி 34 ஓவர்களில் அடித்துவிட்டது என்றால் ஆட்டம் எந்த அளவு மூர்க்கத்தனமாக இருந்திருக்கும்.. ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து அணி வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளது.

டேவிட் மலான் 16, லிவிங்ஸ்டோன் 27 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 43.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

பரிதாப இந்திய அணி

இந்திய அணியில் குல்தீப் யாதவ், குர்னல் பாண்டியா இருவரும் பரிதாபத்துக்குரியவர்கள். இருவரும் சேர்ந்து விக்கெட் ஏதும் எடுக்காமல் 156 ரன்களை வாரிய வழங்கியுள்ளனர்.

இந்திய அணியைப் பொருத்தவரை இந்த ஆட்டத்தில் குறைகூறி எந்தவிதமான பயனும் இல்லை. தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா, தவண் விக்கெட்டை இழந்தது மிகப்பெரிய பின்னடைவு. பவர்ப்ளேயில் ரன்களை சேர்்க்காமல் கோட்டைவிட்டது, இரு வி்க்கெட்டுகள் வீழ்ந்தவுடன் கோலி, ராகுல் கூட்டணி பொறுமையாக ஆடியது போன்றவை ரன் வேகத்தை மந்தப்படுத்தின.

இந்திய அணி முதல்ஆட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் வெற்றியை எளிதாகப் பெற முடிந்தது. இந்த ஆட்டத்தி்ல் விக்கெட்டுகளை வீழ்த்த மிகவும் சிரமப்பட்டதும், நீண்டநேரமாக விக்கெட் எடுக்கமுடியாமல் தடுமாறியதும், வெற்றியை இங்கிலாந்துக்கு தாரை வார்த்துவிட்டது. பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் அடித்து நொறுக்கும் போது கப்டன் கோலி கைைய பிசைந்து கொண்டு, நகத்தைக் கடித்துக்கொண்டு நின்றது பரிதாபம்.

ரொஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்தவீச்சைத் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினர். டாப்ளே வீசிய 4வது ஓவரில் ஸ்லிப்பில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் தவண் வெளியேறினார்.

அடுத்து வந்த கோலி, ரோஹித்துடன் சேர்ந்தார். சாம் கரன் வீசிய 9வது ஓவரில் பேக்வேர்ட் ஸ்குயர் திசையில் ரஷித்திடம் கட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 25 ரன்னில் ஆட்டமிழந்தார். 37 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

3வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். கோலி 35 ரன்கள் சேர்த்திருந்தபோது, ரஷித் பந்துவீச்சில் கட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் பட்லர் தவறவிட்டார்.

பொறுமையாக பேட் செய்த விராட் கோலி, 62 பந்துகளில் தனது 62வது அரைசதத்தை நிறைவு செய்தார். கோலிக்கு ஒத்துழைத்து ராகுலும் கட்டுக்கோப்பாக பேட் செய்து 66 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

அதில் ரஷித் வீசிய 32 ஓவரில் பட்லரிடம் கட்ச் கொடுத்து கோலி 66 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ரஷித் பந்துவீச்சில் 9வது முறையாக கோலி ஆட்டமிழந்தார். ராகுல், கோலி இருவரும் 3வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

4வது விக்கெட்டுக்கு ரிஷப்பந்த் களமிறங்கி ராகுலுடன் சேர்ந்தார். இதன்பின்புதான் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. ரஷித் பந்துவீச்சில் முதல் சிக்ஸரை அடித்து ரிஷப்பந்த் தனது அதிரடியைத் தொடங்கினார். அதன்பின் இங்கிலாந்து பந்துவீச்சை ரிஷப்பந்த் பொளந்து கட்டினார்.

குறிப்பாக ஸ்டோக்ஸ் வீசிய 41வது ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர்களை விளாசி ரிஷப்பந்த் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ராகுலும் தனது பங்கிற்கு பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். 108 பந்துகளில் ராகுல் தனது 5வது சதத்தை நிறைவு செய்தார்.

அதன்பின் டாம் கரன் பந்துவீச்சில் மிட்விக்கெட் திசையில் கட்ச் கொடுத்து ராகுல் ஆட்டமிழந்தார். ராகுல் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 108 ரன்னில் வெளியேறினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுந்துவந்த ஹர்த்திக் பாண்டியா, ரிஷப் பந்த்துடன் சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு இரு சிக்ஸர்களை விளாசினார. இருவரின் காட்டடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் 300 ரன்களைக் கடந்தது.

ரிஷப்பந்த் 77 ரன்களில் டாம்கரன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். குர்னல் பாண்டியா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் டாம் கரன், டாப்ளே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

Leave a Comment