ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதியையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றையடுத்து, அடுத்து வரும் வாரங்களில் உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே இந்தியாவின் சொந்த தேவைக்காக அதிகளவான தடுப்பூசிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு தற்காலிகமானது என்றும், ஏப்ரல் இறுதி வரை விநியோகங்கள் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முடிவால், கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசியை எதிர்பார்த்திருக்கும் சுமார் 190 நாடுகள் பாதிக்கப்படக்கூடும்.
உலக சுகாதார அமைப்பு (WHO) தலைமையிலான கோவாக்ஸ் திட்டம், தடுப்பூசிகள் அனைத்து நாடுகளிடமும் நியாயமான முறையில் பகிரப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா (SII), அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை அண்மைய நாட்களில் இங்கிலாந்து மற்றும் பிரேசில் உட்பட பல நாடுகளுக்கு அனுப்புவதை தாமதப்படுத்தியுள்ளது.
இந்தியா இதுவரை 76 நாடுகளுக்கு 60 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது, இவற்றில் பெரும்பாலானவை ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் ஆகும்.