இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு தெரியாமல்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் அணியினரே ஏற்பாடு செய்த கூட்டம் இன்று யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெறுகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தனி ஆவர்த்தனம் வாசிக்க முயற்சிக்கும் சுமந்திரன் அணியினரின் பின்னணியில், சட்ட மாணவர்கள் என்ற பெயரில் இந்த கூட்டம் இடம்பெறுகிறது.
இதற்கான முன்னோடி சந்திப்பு சில தினங்களின் முன்னர் இடம்பெற்றது.
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் சுமந்திரன் அணியாக பலத்தை நிரூபிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த கூட்டம் இடம்பெறுகிறது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உடைவை ஏற்படுத்தும் முயற்சியென இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
தேர்தலிற்கு முன்னதாக வீரசிங்கம் மண்டபம், சுன்னாகம் போன்ற இடங்களில் சுமந்திரன் அணி இதேவிதமான கூட்டங்களை ஏற்பாடு செய்து, கட்சி தலைமை மீதும் விமர்சனங்களை வைத்தனர். எனினும், தேர்தல் சமயமென்பதால் கட்சி அதற்கு கட்டுப்பாடு விதித்தது.
இம்முறை, கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கட்சியை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் இருக்கையில், சுமந்திரன், சாணக்கியன் குழு மீண்டும் தனி ஆவர்த்தனம் வாசிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த சந்திப்புக்கள் குறித்து கட்சி தலைமையும் கடுமையான அதிருப்தியை கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. கட்சியின் பிரமுகர்கள், கட்சி தலைமையிடம் தமது அதிருப்தியை தெரிவித்திருப்பதை தமிழ்பக்கம் அறிந்தது.
இதேவிதமாக கூட்டங்களை- கட்சிக்கு தெரியாமல், அணிகளை உருவாக்கும் கூட்டங்களை- தொடர்ந்து நடத்த வேண்டாமென கட்சி தலைமை விரைவில் அறிவிக்குமென தெரிய வருகிறது.