பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் அடையாளம் காண முடியாதளவிற்கு சிதைந்துள்ளார்.
இன்று (20) காலை 6.55 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
பசறை லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அந்த பகுதியில் கருங்கல் பாறையொன்று உருண்டு வீதியில் விழுந்துள்ளது. இதனால் வீதியின் ஒரு பகுதியால் போக்குவரத்து செய்ய முடியாமல், இரண்டு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.
சுமார் 6 மாதங்களின் முன்னர் கருங்கல் பாறை உருண்டு விழுந்துள்ளது. எனினும், அதை தொடர்புடைய நிறுவனங்கள் எதுவும் அகற்ற நடவடிக்கையெடுக்கவில்லையென பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அந்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று அந்த குறுகிய பாதைக்குள் நுழைய, பேருந்தும் சடுதியாக அந்த பகுதிக்குள் நுழைய முயன்று, விபத்தை தவிர்க்க இடதுபக்கமாக- பள்ளப் பக்கமாக திருப்பினார்.
பேருந்து விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை 200 அடி பள்ளத்திலிருந்து மீட்க 3 மணித்தியாலங்கள் வரை சென்றுள்ளது. மீட்பு பணியாளர் ஒருவர் மீது கல் விழுந்ததில் அவரும் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த 15 பேரில் 6 பேர் பெண்கள்.


