வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருமித்த இலங்கைக்குள் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வது அவசியமாகும். அதன்மூலம் தேசியபாதுகாப்பும் நாட்டின் சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும்.
அதேபோன்று தோட்டத்தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கக்கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பில் ஐக்கிய மக்கள் சக்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக விளங்குகின்றது. புதிதாகக் கட்சியை ஸ்தாபித்து ஒரு வருடகாலத்திற்குள்ளேயே பாராளுமன்றத் தேர்தலுக்கு முகங்கொடுத்ததுடன் முதற்தடவையிலேயே அதிகளவான ஆசனங்களை வென்றெடுக்க முடிந்தது. இதேபோன்று மீண்டுமொரு பாரிய வெற்றியை வெகுவிரைவில் அடைந்துகொள்வதை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். பொதுமக்களின் ஜனாதிபதியின் தலைமையில் பொதுமக்களின் அரசாங்கமொன்றை அமைப்பதே அந்த இலக்காகும்.
ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய டீல் அரசியல் போக்கை இல்லாமல் செய்தல், சாதாரண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முன்னுரிமையளித்தல், குடும்ப அரசியலைத் தோற்கடித்து மக்களாட்சியை ஸ்தாபித்தல் ஆகியவையே புதிய கட்சி உருவாக்கப்பட்டமைக்கான பிரதான காரணங்களாக அமைந்தன.
ஆரம்பத்தில் இதற்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், தற்போதும் எம்மை நோக்கிக் கற்கள் எறியப்படுகின்றன. எனினும் ரணசிங்க பிரேமதாஸ அவரை நோக்கி எறியப்பட்ட கற்களை அவரது இலக்கைக் கட்டமைப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டதைப் போன்று, நாமும் எம்மை நோக்கி எறியப்படும் கற்களை எமக்கான ஊக்குவிப்பாகக் கருதி முன்நோக்கிப் பயணிக்கின்றோம்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு பல்வேறு விதத்திலும் வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தியும் வீழ்ச்சியடைந்திருப்பதுடன் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் முறையான செயற்திட்டமொன்று பின்பற்றப்படவில்லை.
இந்நிலையில் நாட்டுமக்களை முன்நிறுத்தி, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தலைமைத்துவத்தை இன்னும் சில நாட்களில் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு எமது உயிரைத் தியாகம் செய்வதற்குக்கூடத் தயாராக இருக்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகளாலும் செயற்பாடுகளாலும் இளைஞர் சமுதாயம் பெரிதும் ஏமாற்றமடைந்திருக்கின்றது.
எமது நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.நாங்கள் பௌத்த தர்மத்தைப் பின்பற்றி செயற்படுகின்றோம். எனினும் பௌத்த தர்மத்தில் எந்தவொரு இடத்திலும் ஏனைய இன, மதங்களை அழிக்குமாறு கூறப்படவில்லை.
நாம் ஒருபோதும் சிங்கள பௌத்தத்திற்குத் துரோகமிழைக்க மாட்டோம். அதேவேளை பௌத்த தர்மத்தின் உள்ளடக்கத்தைத் தவறாக அர்த்தப்படுத்தி, அதன்மூலம் அடிப்படைவாத மற்றும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போரினால் ஒட்டுமொத்த நாட்டுமக்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட வட,கிழக்கு மக்கள் அதனால் அதிகளவில் பாதிப்படைந்தார்கள்.
எனவே ஒருமித்த இலங்கைக்குள் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வது அவசியமாகும். அதன்மூலம் தேசியபாதுகாப்பும் நாட்டின் சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும்.
அதேபோன்று தோட்டத்தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கக் கூடியவகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.