மன்னாரில் இருந்து கொழும்பிற்கு புகையிரதத்தில் பயணிக்கும் மக்கள் ஆசன முற்பதிவு இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல்லின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் இன்று புதன் கிழமை (10) மதியம் அரசாங்க அதிபர் மன்னார் புகையிரத நிலையத்திற்கு சென்று உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
மன்னாரில் இருந்து கொழும்பிற்கான ஆசன முற்பதிவு இணையம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும் முற்பதிவு சேவைகளில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் முற்பதிவு செய்ய முடியாத நிலையில் மன்னாரில் இருந்து கொழும்பிற்கு புகையிரதத்தில் பயணித்து வந்தனர்.
இந்த பிரச்சினை நீண்டகாலமாக காணப்பட்டுள்ளது. முற்பதிவு செய்து பயணிப்பதற்கான புகையிரத இருக்கைகள் மன்னாரில் இருந்து வெறுமையாகவே செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.
அரசாங்க அதிபர் மன்னார் புகையிரத நிலையத்திற்குச் சென்று உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி மக்கள் பல நாட்களாக எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த நிலையில் ஏற்பட்டுள்ள இடர்களை நிவர்த்தி செய்து உடனடியாக மன்னாரில் இருந்து கொழும்பிற்கான முற்பதிவு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி நடமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.