முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் கிழவன்குளம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் சபை அனுமதி பெறப்படாமல் பிரதேச சபையால் ஒட்டப்பட்ட தடை உத்தரவை மீறி பொலிஸ் முறைப்பாடு இருந்தபோதும் கிறிஸ்தவ சபைக்கூடத்தை பாதிரியார் ஒருவர் அமைத்துள்ளார். இது பாரிய பிரச்சனையாக உருவெடுத்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை விசேட அமர்வில் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
கிழவன்குளம் சட்டவிரோத சபைக்கூடம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை விசேட அமர்வு ஒன்றுக்கு சபையின் உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு அதற்கமைய 01.03.2021 சபை அமர்வு நடைபெற்றுள்ளது.
தவிசாளர் ஆ .தவக்குமார் தலைமையில் நடைபெற்ற அமர்வில் கிழவன்குளம் பகுதியில் பிரதேச சபையின் அனுமதி இன்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ சபை கட்டிடம் தொடர்பில் விசேட சபை அமர்விற்காக கோரிக்கை விடுத்த உறுப்பினர்களால் பிரதேச சபையின் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்த காலப்பகுதியின் தவிசாளர், செயலாளர், ஒலுமடு உப அலுவலக பொறுப்பதிகாரி ஆகியோரின் தவறு எனவும், அவர்களது தவறால் இன்று பிரதேச சபை அவமானப்படவேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனவும் தெரிவித்தனர்.
கிழவன்குளம் பகுதியில் கிறிஸ்தவ சபையின் கட்டிடம் எவரின் அனுமதியும் இன்றியும் சட்ட விதிகளை மீறியும் பிரதேச சபையின் தடை உத்தரவு ஒட்டப்பட்டும் அதனை மீறியும் பொலிஸ் முறைப்பாடு இருந்தும் அதனையும் மதிக்காமல் கட்டுமான பணிகள் இடம்பெற்றமை தொடர்பில் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பிரச்சனை பூதாகராமாக மாறியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்ற பல கேள்விகள் சபையில் உறுப்பினர்களால் கேட்கப்பட்டது. சபையின் உறுப்பினர்களால் பலதடவைகள் சொல்லியும் எதுவும் நடக்கவில்லை என்பதையும், பிரதேச சபையின் நிர்வாக திறன் இன்மையால் இவ்வாறான நடவடிக்கை என சபையின் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டு தீர்மானம் எடுக்க வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் குறித்த சட்டவிரோத கட்டிடத்தினை அகற்றுவது தொடர்பில் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
21 உறுப்பினர்கள் சபையில் வருகைதந்த போது இந்த தீர்மானத்தில் இறுதியில் இரண்டு உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தில் இருந்து விலகிக்கொண்டுள்ளார்கள்.
குறித்த அமர்வில் இவ்வளவு நடந்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோனமை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதா அரசியல் அழுத்தமா என உறுப்பினர்களான மு.முகுந்தகஜன்,சி.குகனேஷன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்
இதனை விடவும் முன்னாள் தவிசாளர் செ.பிறேமகாந்த், வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத கட்டிடம் ஒன்றுக்கு அரசியல் தலையீடு காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார். இவ்வாறே அரசியல் செல்வாக்குகளுக்கும் இலஞ்சத்துக்கும் அடிமையாகி சபையின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
அத்தோடு சபையினை அவமானத்துக்கு உள்ளாகியுள்ள இந்த விடயத்துக்கு பல உறுப்பினர்கள் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டனர்.