27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

யாழ் பல்கலைக் கழகத்தில் மீண்டும் உடற்கல்வி உயர் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான அறிமுக நிகழ்வு நாளை 3 ஆம் திகதி, புதன் கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு-

பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடந்த மாதம் 07 ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாதாந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் விளையாட்டு விஞ்ஞான அலகு, புதிய துறையாக உள்வாங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகினால் நடாத்தப்பட்டு வந்த உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரத்தை அடுத்து மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்துடன், முதற்கட்டமாக உடற்கல்வியில் உயர் டிப்ளோமாக் கற்கை நெறி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கற்கைநெறிக்கான அறிமுக நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. விளையாட்டுத் துறையில் பட்டக் கற்கை நெறியைத் தொடர்வதற்கான திறவுகோலாக இந்த ஆரம்பம் அமைகிறது. மிக நீண்டகாலமாக இடை நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கற்கைநெறிகள் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் முயற்சியின் பலனாக இன்று ஆரம்பமாகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு, அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளையினால் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப காலங்களில் அந்தக் கற்கைநெறி மருத்துவ பீடம், வணிக முகாமைத்துவ பீடம்ஆகியவற்றின் கீழ் மாறி, மாறி செயற்படுத்தப்பட்டது. இரண்டு வருட காலத்தைக் கொண்ட டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களை, மூன்றாம் வருடத்தில் உடற் கல்விமாணிப் பட்டதாரிகளாகப் பயிற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அங்கு நிலவிய உள்ளக முரண்பாடுகள் காரணமாக அது சாத்தியப்படாமல் போனது.

விஞ்ஞான பீடத்தின் கீழும், கலைப் பீடத்தின் கீழும் உடற்கல்விமாணிப் பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் கடந்த காலங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அங்கீகரிக்கப்படவில்லை.

கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் புதிய துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் உடற் கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்பை நடாத்துவதற்காக மூதவை, பேரவை ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப் படிப்புக்கான முன்மொழிவு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த முன்மொழிவு, கடந்த மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாதாந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி க.பொ.த உயர்தரத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த தேவைப்பாட்டை நிறைவு செய்த, விளையாட்டுத்துறையில் ஈடுபடுகின்ற மாணவர்களை உள்வாங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. வெளிவரவிருக்கின்ற 2020 ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உடற் கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு

east tamil

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil

Leave a Comment