தைராய்டு குறைபாடு என்றதும், அது பெரியவர்களை பாதிக்கும் பிரச்சனை என்றுதான் நினைக்க கூடும். ஆனால், பிறந்த குழந்தைகளுக்கும் அந்தப் பிரச்னை ஏற்படலாம். குழந்தையைப் பிறவியிலேயே பாதிக்கும் ‘பிறவிக்குறை தைராய்டு சுரப்பு’ (Congenital Hypothyroidism) என்பது பிறக்கும்போதே தைராய்டு சுரப்பி, தேவைக்கும் குறைவான அளவு சுரக்கும் ஒரு பிரச்னை.
மூளையில் பிட்யூட்டரி சுரப்பி சரியான அளவுக்குச் சுரக்கவில்லையென்றால், பிட்யூட்டரியிலிருந்து சிக்னல்களைப் பெற்றுச் சுரக்கிற தைராய்டு சுரப்பியும் சரியாகச் சுரக்காது.
சில குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பியே இருக்காது. இவை தவிர, தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி முழுமையாக இல்லாதபோதும், தைராய்டு தேவையான அளவுக்குச் சுரந்தும், அதை மற்ற உறுப்புகள் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலைமையிலும் ‘பிறவிக்குறை தைராய்டு சுரப்பு’ பிரச்னை ஏற்படலாம்.
சில குழந்தைகளுக்கு, பிறக்கும்போது தேவையான அளவுக்குச் சுரக்காத தைராய்டு, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு சரியாகச் சுரக்க ஆரம்பித்துவிடும். ஆனால், குறை தைராய்டு பிரச்னையுள்ள குழந்தைகளும், தைராய்டு சுரப்பியே இல்லாமல் பிறக்கிற குழந்தைகளும் தங்கள் வாழ்நாள் முழுக்க இதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே உண்மை.
அறிகுறிகள்…
தசைகள் தொளதொளவென்று இருப்பது, கரகர சத்தத்துடனான அழுகை, தடிமனான நாக்கு, மலச்சிக்கல் எனப் பல அறிகுறிகள் காணப்படும்.
எவ்விதமான பிரச்சனை ஏற்படும்…
பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தைராய்டு மிக மிக முக்கியம். பிறந்த இரண்டு வருடங்களில் குழந்தையின் மூளை வளர்ச்சி, மிக வேகமாக இருக்கும். அதற்கேற்றாற்போல், இந்த நேரத்தில் தைராய்டு ஹார்மோனின் சுரப்பும் மிக அதிகமாக இருக்கும்.
ஒருவேளை இந்த தைராய்டு பிரச்னையை, குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்க முடிந்து, சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தால் குறை தைராய்டு சுரப்புக்கான அத்தனை அறிகுறிகளும் சரியாகிவிடும்.
என்றாலும், அந்த இரண்டு மாதங்களில் வளரவேண்டிய மூளை வளர்ச்சி அந்தக் குழந்தையிடம் இருக்காது. இதனால் குழந்தை வளர்ந்த பிறகு அதனுடைய யோசிக்கும் திறன் குறைவாக இருக்கும் இதை மட்டும் சரிசெய்ய முடியாது.
குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்குள் இந்தப் பிரச்னையைக் கண்டுபிடித்து சிகிச்சை தரவில்லையென்றால், குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். ஆனால், இவையெல்லாமே 100 சதவிகிதம் வராமல் தடுக்கக்கூடியவைதான்.
தீர்வுகள்
சில வருடங்களுக்கு முன்புவரை, பிறந்த குழந்தையின் ‘பிறவிக்குறை தைராய்டு சுரப்பு’ பிரச்னையின் அறிகுறிகளை டாக்டர்கள் கண்டுபிடிப்பதற்கே நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆன நிலைதான் இருந்தது. அதற்குள் குழந்தையின் மூளை வளர்ச்சி குறைந்துவிட்டிருக்கும். ஆனால், ‘நியூ பார்ன் ஸ்க்ரீனிங் (NBS – Newborn Screening Test)’ என்ற ரத்தப் பரிசோதனை வந்த பிறகு இந்த நிலை மாறிவிட்டது.
பிறந்த குழந்தையிடம் ‘பிறவிக்குறை தைராய்டு சுரப்பு’ பிரச்சனைக்கான அறிகுறிகள் இருக்கின்றனவோ, இல்லையோ… பிறந்தவுடன் எல்லா குழந்தைகளுக்கும் தைராய்டு சுரப்பு தேவையான அளவுக்கு இருக்கிறதா என்று உலகம் முழுக்கப் பரிசோதித்துவிடுகிறார்கள். அதனால், நம் தலைமுறைக் குழந்தைகளுக்கு ‘பிறவிக்குறை தைராய்டு சுரப்பு’ பிரச்சனை வந்தால் சரிசெய்துவிடலாம்.’’