வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பான இறுதி முடிவை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (24) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழும்பிய கேள்விக்கு பதிலளித்த போது, இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் 3 தீவுகள் குத்தகைக்கு வழங்கப்படவில்லை. அவற்றை வங்கியதாக கூறப்படவது பிழையான தகவலாகும்.
அங்கு மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்து அந்த பிரதேச மக்களுக்கான மின்சார தேவை பூர்த்தி செய்ய வேண்டியது தேசிய தேவையாக இருக்கிறது.
இந்த நிலையிலேயே அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தது. இந்த வேலைத்திட்டத்துக்கு 5 வருடங்களுக்கு முன்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக சர்வதேச கேள்விக் கோரல் முன்வைக்கப்பட்டது.
அப்போது கேள்விக்கோரலுக்கு முன்னிலையான அனைவரும் தோல்வி அடைந்தனர். பின்னர் 2019ம் ஆண்டு 4 நிறுவனங்கள் உள்வாங்கப்பட்டன. அவற்றில் இந்தியா, சீனாவின் இரண்டு நிறுவனங்களும் அடங்குகின்றன. எனவே சர்வதேச கேள்விக் கோரலில் சிக்கல் இல்லை.
ஆனாலும் இதுதொடர்பாக அமைச்சரவை இன்னும் தீர்மானிக்கவில்லை. திறைச்சேரி புதிய தொழில்நுட்பம் குறித்த அறிக்கையைக் கோரியுள்ளமையே அதற்கான காரணமாகும்.
அதேநேரம், இந்த வேலைத்திட்டம் குறித்த தொழில்நுட்ப அறிக்கை வழங்கப்படுமாக இருந்தால் அதற்கான நிதியை மானியமாக வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக, இந்திய உயர்ஸ்தானிகரும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை யாரிடம் வழங்குவது என்பது பற்றி இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.