ராஜகிரிய மேம்பாலம் அருகே கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பிரபல பாடகி உமரியா சின்ஹவன்ச ரூ. 500,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இன்று (01) இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேக நபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோடு, உரிமத்தை காவலில் எடுத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
சம்பவத்தில் காயமடைந்து தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முச்சக்கரவண்டி சாரதிக்கு அனுதாபக் கொடுப்பனவாக ரூ .80,000 வழங்கவும் பிரதிவாதி ஒப்புக்கொண்டார்.
சந்தேகநபர் ஓட்டி வந்த கார் நேற்று (31) மாலை 5.30 மணியளவில் மற்றொரு முச்சக்கரவண்டி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 38 வயதான முச்சக்கர வண்டியின் சாரதி ஆபத்தான நிலையில் இருப்பதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், காயமடைந்தவர்களுக்கு அனுதாபக் கொடுப்பனவை வழங்குமாறு சந்தேக நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, பிணையில் விடுவித்தது.




