முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீட்டு முயற்சி இன்று நடைபெற்ற போது, பொதுமக்களின் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அளவீட்டு பணிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அங்கு சீன வம்சாவளி சேர்ந்த பிரஜையின் குடும்பமும் பிரசன்னமாகியிருந்தது.
நீர்கொழும்பில் வசித்துவருகின்ற அவருக்கு கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாக கூறுகிறார்.
அந்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்ட ஈட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினார்.
குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து வெ ளியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார்.
சீன தந்தையொருவருக்கும் சிங்கள தாய்க்கும் பிறந்த தான், தற்போது சிங்கள பெண்ணை திருமணம் முடித்திருப்பதாக கூறினார்.




