மாகாணசபைத் தேர்தலை இனியும் தாமதிக்க வேண்டாம்! பழைய தேர்தல் முறையை மீளக் கொண்டுவர EPRLF வலியுறுத்தல்!
மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதுடன், 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறையை நீக்கி, மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) வலியுறுத்தியுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளிலேயே அக்கட்சி இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பு அங்கீகாரத்தைப் பெற்றதாக EPRLF சுட்டிக்காட்டியுள்ளது.
மாகாணசபைகள் வெறுமனே நிர்வாக அமைப்புகள் அல்ல என்றும், அவை அரசியலமைப்பின் மூலம் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டவாக்க அமைப்புகள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தி, புலம்பெயர் மக்களின் முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண நிர்வாகங்கள் அவசியமானவை எனவும் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு!
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இணைந்த கலப்புத் தேர்தல் முறைமையே தற்போதைய தேர்தல் முடக்கநிலைக்கு முக்கிய காரணம் என EPRLF தெரிவித்துள்ளது.
குறித்த தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொகுதி எல்லை நிர்ணயப் பணிகள் முழுமையடையாததால், மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தொகுதிவாரி தேர்தல் முறைமையால் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் வாக்குப் பலம் சிதறடிக்கப்படுவதுடன், சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளது.
மாகாணசபைகள் உள்ளூராட்சி மன்றங்களைப் போன்றவை அல்ல என்றும், அவற்றின் சட்டவாக்க மற்றும் கொள்கை உருவாக்கப் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட 60:40 கலப்புத் தேர்தல் முறைமையினால் பல சபைகளில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டதையும் தனது முன்மொழிவில் சுட்டிக்காட்டியுள்ளது.
EPRLF முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!
மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்காக 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க திருத்தச் சட்டத்தை மீளாய்வு செய்து, அதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என EPRLF கோரியுள்ளது.
அத்துடன், மாகாணசபைகள் கலைக்கப்பட்டாலோ அல்லது அவற்றின் பதவிக்காலம் முடிவடைந்தாலோ, அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்தல்களை நடத்துவதற்கும் புதிய சபைகளை அமைப்பதற்கும் சட்ட ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளது.
பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை மாகாணசபைகளில் மட்டுமன்றி, பாராளுமன்றத்திலும் உறுதிப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த சட்ட ஏற்பாடுகள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைவாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தேர்தல் முறைமையில் மாற்றங்களை மேற்கொள்வதன் பெயரில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் அவற்றின் சட்டவாக்க அந்தஸ்தையும் பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிப்பதாகவும் EPRLF தெரிவித்துள்ளது.
மாகாணசபைத் தேர்தல்களைத் தொடர்ந்து ஒத்திவைப்பதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, அதிகாரப் பகிர்வையும் மக்களின் அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதே உண்மையான ஜனநாயகத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடித்தளமாக அமையும் எனவும் வலியுறுத்தியுள்ளது.




