தியாகி திலீபனின் நினைவுத்தூபியை அகற்றுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ் மாநகரசபைக்கு வழங்கப்பட்ட கட்டளையைத் தான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை எனத் தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் திருமதி மதிவதனி, குறித்த கட்டளைக் கடிதத்தைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டதாகவும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் இன்றைய மாதாந்த அமர்வில் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பான விவாதம் இடம்பெற்றபோதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மாத இறுதிப் பகுதியில் தியாகி திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் யாழ் மாநகர முதல்வர் உள்ளிட்ட பலரிடம் பொலிஸாரின் குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நல்லூர் ஆலயத்தின் மேற்குப் புறத்திலுள்ள காணியைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விடயம் இன்றைய சபை அமர்வில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதல்வர் மதிவதனி, நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் நோக்கங்களுக்காக எவரும் தடுக்கவோ அல்லது குழப்பங்களை ஏற்படுத்தவோ முயற்சிக்காமல், அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த மாதமும் தியாகி திலீபனின் நினைவுச்சிலை அமைப்பதற்கான அனுமதி தொடர்பான விடயம் ஒரு தரப்பினரால் அவசர அவசரமாகச் சபைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், அதற்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதிலும் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தகையதொரு பின்னணியில் தற்போது மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பான விடயம் வந்துள்ளதால், இம்முறை அதனை மிகவும் அவதானத்துடன் கையாள வேண்டியுள்ளதாகவும், இறுக்கமான நடைமுறைகளின் அடிப்படையிலேயே அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாநகரசபை உறுப்பினர் தர்சானந்தன், யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகம் மற்றும் யாழ். மத்திய பொலிஸ் நிலையம் உள்ளிட்ட கட்டடங்கள் மாநகரசபையின் அனுமதியின்றியே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவ்வாறான நிலையில், தியாகி திலீபனின் நினைவுத்தூபியை மாத்திரம் சட்டவிரோதக் கட்டுமானம் எனக் கூறி அகற்றுமாறு பொலிஸார் கோருவதற்கு என்ன அருகதை இருக்கின்றது என அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டுமாயின், மாநகரசபையின் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஏனைய பொதுக் கட்டடங்கள் தொடர்பிலும் மாநகரசபை கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தமிழ் மக்களின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்துள்ள நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பல்வேறு நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஓர் அங்கமாகவே தியாகி திலீபனின் நினைவுச்சிலை விவகாரத்தையும் நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநகரசபையின் ஆளுகைக்கும் அதிகார வரம்பிற்கும் உட்பட்ட விடயங்களில் பொலிஸார் தலையிட முடியாது என்றும் உறுப்பினர் தர்சானந்தன் இதன்போது வலியுறுத்தினார்.
தியாகி திலீபனின் நினைவுத்தூபி விவகாரம் ஏற்கனவே அரசியல் மற்றும் சட்ட ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், யாழ் மாநகரசபையின் இன்றைய அமர்வில் முதல்வர் வெளியிட்ட கருத்துகளும் உறுப்பினர்களின் கேள்விகளும் மீண்டும் இவ்விவகாரத்தை அரசியல் அரங்கில் பேசுபொருளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




