மத்திய பிரதேசத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க துறவியிடம் போலீஸார் குறி கேட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதால், எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக ஆளும் ம.பி.யின் சத்ரபூரில் உள்ளது பமிதா காவல் நிலையம். கடந்த ஜுலை 28ஆம் திகதி ஒண்டா பூர்வா கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் 12 வயது சிறுமியின் உடல் கிடந்தது. புகாரின் அடிப்படையில் ஐபிசி 302 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், வழக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி கொலையில் எந்த துப்பும் கிடைக்காமல் அவர்கள் திணறினர். இதனால் பமிதா காவல் நிலையத்தினர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இச்சூழலில், வழக்கை விசாரித்து வந்த எஸ்.ஐ. அனில் சர்மா, அப்பகுதியில் பிரபலமான துறவி பந்தோகர் சர்க்காரை அணுகி கொலையாளி குறித்து குறி பார்த்து சொல்லும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்த துறவி, சிறுமியின் தாய் மாமன் தீரத் அஹிர்வார்தான் கொலைக்கு காரணம் என்று கூறியதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் தீரத்தை எஸ்.ஐ. அனில் சர்மா கைது செய்தார்.
அவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை தெரிந்து கொண்டதால் சிறுமியை கொன்று கிணற்றில் வீசியதாகவும் கூறியுள்ளார். அதை கேட்டு சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அதுபோல் எந்த பெண்ணுடனும் தீரத்துக்கு தொடர்பில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், துறவி சர்க்கார் சிறப்பு பூஜைகள் செய்தது, அதில் எஸ்.ஐ. அனில் சர்மா பங்கேற்றது போன்ற காட்சிகளுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதையடுத்து அனில் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து சத்ரபூர் மாவட்ட எஸ்.பி. சச்சின் சர்மா நேற்று உத்தரவிட்டார்.
மேலும், சிறுமி கொலை வழக்கை எஸ்.பி. சர்மாவே விசாரிக்க தொடங்கி உள்ளார்.