இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க, கோட்டாபய பயணித்த இராணுவ விமானம் தமது நாட்டில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டதாக மாலைதீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,மாலைதீவில் அடைக்கலம் புகுந்திருந்தார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.
கோட்டாபய தமது நாட்டிற்கு வந்தது தொடர்பாக மாலைதீவு அரசு விளக்கமளித்துள்ளது.
அந்த விளக்கத்தில்-
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க மாலைதீவு அரசாங்கம், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது துணைவியார் பயணித்த இலங்கை விமானப்படை விமானம் வெலானா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு இராஜதந்திர அனுமதியை வழங்கியது. விமான நிலையம் 13 ஜூலை 2022 தரையிறங்கியது. ஜனாதிபதி ராஜபக்ஷ 14 ஜூலை 2022 அன்று சிங்கப்பூர் சென்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கோட்டாபய இலங்கையிலிருந்து மாலைதீவுகளிற்கு தப்பிச் செல்ல ஏற்பாடு செய்த அந்த நாட்டு சபாநாயகர் மொஹமட் நஷீட் தனது ருவிற்றர் பதிவில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி விட்டார். இலங்கை தற்போது முன்னோக்கி செல்ல முடியும். கோட்டாபய இலங்கையில் இருந்திருந்தால், உயிருக்கு பயந்து, பதவியை இராஜினாமா செய்திருக்க மாட்டார். மாலைதீவு மக்களின் சிந்தனை மிக்க செயல்களை பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் என பதிவிட்டிருந்தார்.




