தனது கணவனை அடித்துக் கொலை செய்த இளம் மனைவிக்கு ஏழு வருட சிறைத்தண்டனையும் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் தந்தைக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா அபராதமும் விதித்து பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.
கொஸ்கொடவைச் சேர்ந்த லக்முனி சதுரி மதுஷ்க டி சில்வா (26) மற்றும் அவரது தந்தை லக்முனி கீர்த்தி சந்திரலால் டி சில்வா (58) ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கட்டுவில, அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த எதிரிமுனி திலின பெரேரா கருணாரத்ன (25) என்பவரின் கொலைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி காலை குற்றவாளிகளின் வீட்டில் நாற்காலியில் கிடந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கொஸ்கொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தண்டிக்கப்பட்ட லக்முனி சதுரி மதுஷ்க டி சில்வாவின் வருங்கால கணவன் குணந்தவடு தனுஷ்க டி சொய்சா (38) மற்றும் அவரது நண்பரான தினேஷ் ரோஹன டி சொய்சா (30) ஆகியோரும் கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். எனினும், வழக்கு விசாரணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொஸ்கொட பொலிஸாரும் எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பாதிக்கப்பட்ட நபர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதையும், உயிரிழந்தவரின் கைகால் மற்றும் உடலின் பல பாகங்கள் வீங்கி நீலநிறமாக காணப்பட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இறந்தவரின் கை கால்கள் கட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்களை போலீசார் அவதானித்துள்ளனர்.
உயிரியல் ஆதாரங்களின்படி, பாதிக்கப்பட்டவரின் நெற்றியில் பெரிய இரத்தக் காயம் மற்றும் உடல் முழுவதும் கீறல்கள் இருந்ததையும், இரவு முழுவதும் அவர் தாக்கப்பட்டதையும் எல்பிட்டிய சிறப்பு குற்றப் பிரிவு புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியது.
தண்டனை விதிக்கப்பட்ட லக்முனி சதுரி மதுஷ்க டி சில்வா (26) மற்றும் கொல்லப்பட்ட கணவருக்கு 7 1/2 வயதுடைய பெண் குழந்தையும் உள்ளது. இருவருக்குமிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி கொஸ்கொட, வதுரவெல பிரதேசத்தில் உள்ள வீட்டிலும், கணவர் கட்டுவில அஹுங்கல்ல பகுதியிலும் வசித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று அவரது மகளிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், உயிரிழந்தவர் கொஸ்கொடவில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போதே மனைவியினால் தாக்கப்பட்டுள்ளார்.




