ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக 60 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவான நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரது மகன் உமர் அப்துல்லா உறுதி செய்துள்ளார்
இது தொடர்பாக அவரது மகன் உமர் அப்துல்லா தனது டுவிட்டரில், “எனது அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகளும் இருக்கின்றன. நான் உட்பட எங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எங்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் பரூக் அப்துல்லா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.