24.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

நேற்றைய (2) அமைச்சரவை கூட்ட முடிவுகள்!

02.05.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01.  ‘நெதுன்கமுவ ராஜா’ தந்தயானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்தல்

நாட்டில் பிரதான வணக்கத்தலங்கள் பலவற்றில் பெரஹரா உற்சவங்களில் கலந்து கொண்டுள்ளதும் 2005 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை 13 தடவைகள் ஸ்ரீ தலதா மாளிகை பெரஹராவின் புனித பேழையை தாங்கி உற்சவ வீதி உலா சென்ற மங்கலகரமான தந்தயானை ‘நெதுன்கமுவ ராஜா’ 07.03.2022 அன்று உயிரிழந்துள்ளது. தற்போது குறித்த தந்தயானையின் இறந்த உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது நாட்டின் கலாசார வைபவங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்களை கருத்தில் கொண்டு ‘நெதுன்கமுவ ராஜா’ எனும் தந்தயானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தால் வெளியேறும் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயில் முறைமையை நடைமுறைப்படுத்தல்

 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக பல்வித மேம்படுத்தல்கள் சிலவற்றை மேற்கொள்வதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி திட்டமிட்டுள்ளது. அதன்கீழ் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் ‘ஒரு அடையாள அட்டை’ (One ID) எனும் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு முதலாவது முனையத்தின் ஊடாக வெளியேறும் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயிலை அறிமுகப்படுத்தும் முன்னோடி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளியேறும் முனையத்திற்கான உள்நுழையும் வாயிலில் இலத்திரனியல் கதவு ஃ முக அடையாளத்தைக் கண்டறியும் இயந்திரம் (Electronic gate / Face recognition machines) பொருத்தப்பட்டு பயணிகளின் அடையாளத்திற்காக செல்லுபடியாகும் இலத்திரனியல் உள்நுழைவு அனுமதிச்சீட்டு தன்னகத்தே வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் இலகுவாக பயணிகள் பரிசோதனைகளைப் பூர்த்தி செய்வதற்கான இயலுமை கிட்டும். சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கமைய அதற்கான முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.  1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

2022 மார்ச் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்றதுமான பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்காக 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 2022 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் 09.04.2022 ஆம் திகதிய 2274ஃ42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளின் அங்கீகாரத்திற்காகப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.  1974ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைச் சட்டத்திருத்தம்

நீர் வழங்கல் துறையில் சமகால மற்றும் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் 1974 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப வரைபைத் தயாரிப்பதற்காக நீர்வழங்கல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக 12.07.2021 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப வரைபின் பிரகாரம் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீர்வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.  2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை நாணய சபையால் 29.04.2022 ஆம் திகதி நிதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பாராளுமன்ற அமர்வு இடம்பெறுமாயின், ஆண்டறிக்கை கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் நிதி அமைச்சர் அவர்கள் குறித்த ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.  1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

பல்வேறு நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளைக் கருத்தில் கொண்டு சர்வதேச இணங்கியொழுகல்களுக்கு ஏற்புடைய பண்டங்களுக்கான வசதிகளை வழங்குவதற்காக புதிய தேசிய ஒத்திசைக்கப்பட்ட பொருட்களின் உபபிரிவுகள் மற்றும் இறக்குமதி முன்னுரிமை சுங்க குறியீடு (HS National Sub Divisions) வியாபாரப் பண்ட பிரிவுகள் சில புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள சுங்கக் குறியீடுகள் 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 11.01.2022 ஆம் திகதிய அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர், குறித்த புதிய இறக்குமதி முன்னுரிமை சுங்க குறியீடு, நிதி அமைச்சின் உடன்பாடுகளுடன் 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வர்த்தக அமைச்சர் அவர்களால் கட்டளைகளாக வெளியிடப்பட்டுள்ளது. 11.01.2022ஆம் திகதிய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த கட்டளைகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்;ப்பிப்பதற்கு வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07.  நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கல்

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்புப் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு துரிதமாக உதவி வழங்க வேண்டிய தேவையை அரசாங்கம் அடையாளங் கண்டுள்ளது. உலக வங்கிக் குழும நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கருத்திட்டமான குறிப்பீடற்ற துரித பதிலளிப்பு பிரிவின் மூலம் அதற்கான நிதி வழங்குவதற்கு உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு மே மாதம் தொடக்கம் யூலை மாதம் வரை குறித்த உதவிகளை வழங்குவதற்கான விசேட கொடுப்பனவு நடவடிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08.  சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகையை வழங்கல்

இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் அடிப்படையில் கிடைக்கப்பெற்றுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் கீழ் டீசல் மற்றும் பெற்றோல் கொள்வனவு செய்வதற்கான 04 பெறுகைகளுக்காக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை வரையறுக்கப்பட்ட இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

09.  வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்

வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்வதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கௌரவ பிரதமர் மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பங்கேற்புடன் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

10.  துரித முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காணல்

நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக துரிதமாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காண்பதற்காக கீழ்வரும் அமைச்சர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நாலக கொடஹேவா-வெகுசன ஊடக அமைச்சர் – தலைவர்

திலும் அமுனுகம- போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்

கஞ்சன விஜேசேகர – எரிசக்தி அமைச்சர் மற்றும் மின்வலு அமைச்சர்

பிரமித பண்டார தென்னகோன்- துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்

லொஹான் ரத்வத்த-நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

11.  புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணத்துவக் குழு அறிக்கை

புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா அவர்களின் தலைமையில் சட்டத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு 09.09.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இக்குழுவின் ஆரம்ப அறிக்கை 25.04.2022 அன்று மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து உகந்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்காக கீழ்க்காணும் அமைச்சர்களுடன் கூடிய உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜீ.எல். பீரிஸ்- வெளிவிவகார அமைச்சர் – (தலைவர்)

தினேஷ் குணவர்த்தன- அரச பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சர்

ரமேஷ் பத்திரன- கல்வி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

அலி சப்ரி – நிதி அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

Leave a Comment