உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தாமதப்படுத்தப்படுவதற்கு காரணம் இதுவா?: பேராயர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மறைக்கப்பட்ட தகவல்கள் வெளியாகலாம் என்ற அச்சம் காரணமாக, அது தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதியின் தொடர்பு அரசாங்க உயர் அதிகாரிகள் மூலம் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் தற்போதைய அரசாங்கம் அவரைப் பாதுகாக்கிறதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கும் தமக்கும் இருப்பதாகவும் கர்தினால் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாததன் பின்னணியில் சதி இருப்பதாக பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. ஜயவர்தன மற்றும் பல உயர் அதிகாரிகள்.வெளிப்படுத்தல்களை விசாரிக்காமல் இருப்பது அனைத்தையும் சிவப்பு கம்பளத்தின் கீழ் மறைத்து உண்மையை மறைக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சி எனவும் கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று (21) காலை நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாதிகளிற்கு அப்பால் சென்று விசாரணை நடத்த வேண்டும். முன்னாள் சட்டமா அதிபர் சில விடயங்களை கூறியுள்ளார். சஹ்ரான் குழுவினர் வைத்திருந்த ஆயுதங்கள், அவர்களின் ஆயுதக்களஞ்சியங்கள், எவ்வாறு தீவிரவாத குழுவில் ஈர்க்கப்பட்டனர் என்பதை தாக்குதலிற்கு முன்னரே அறிந்திருந்தனர்.

இந்திய புலனாய்வு பிரிவு 4 தடவைகள் தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருந்த போதும், அவர்களை கைது செய்து விசாரணை செய்யவில்லை.

ஏன் அதனை செய்யவில்லை.

இவ்வாறான பதில்கள் வழங்கப்படாத பல மர்மங்கள் எம் மத்தியில் உள்ளன.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் காசிம் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவிற்கிடையில் தொடர்பு இருந்ததாக கெகலிய ரம்புக்வெல ஏற்றுக்கொண்டிருந்தார். அவர்கள் இராணுவப் புலனாய்வு பிரிவினால் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

தாஜ் சமுத்திரா ஹொட்டலில் குண்டுத்தாக்குதல் நடத்த சென்ற ஜமீல் என்பவர் தொடர்பிலும் அறிந்திருந்தனர். அது மாத்திரமன்றி தெஹிவளை ஹொட்டலில் அன்று மதியம் அந்த குண்டை அவர் வெடிக்க செய்ய முன்னர், அவரை தேடி, அவரது வீட்டுக்கு இராணுவப் புலனாய்வு பிரிவினர் சென்றதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பிலும், தாக்குதல் தாரிகள் தொடர்பிலும் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே அறிந்திருந்தும், தாக்குதலை தடுக்காமை எமக்குள்ள பாரிய பிரச்சனையாகும்.

பயங்கரவாத குழுவின் ஆயுதக்களஞ்சியம், குண்டு தயாரிக்கும் ஆயுதக்களஞ்சியசாலை என்பன 2018 இல் வண்ணாத்திவில்லுவில் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிமருந்து, டெட்டனேட்டர்கள் எவ்வாறு அவர்களிற்கு கிடைத்தது என்பது இன்னும் தெரியாமலேயே உள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளினால் சஹ்ரான் காசிமை பிடிப்பதற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா 2018 ஜூலை 9 இல் பிடியாணை பெற்றிருந்த போது, நாமல் குமார என்பவர் செய்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து – அதாவது முன்னாள் ஜனாதிபதியையும், தற்போதைய ஜனாதிபதியையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தமையால், சஹ்ரான் தொடர்ந்து சுதந்திரமாக இருந்தமையால், அவர் திட்டமிட்ட தாக்குதலிற்கு வழிவகுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வண்ணாத்திவில்லுவில் 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கண்டபிடிக்கப்பட்ட பாரிய ஆயுதக்கிடங்கு பற்றி அறிந்திருந்தும், பாதுகாப்புசபையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த போதும், பாதுகாப்பு சபையை கூட்டாமையும், சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய வேண்டுமென சில அதிகாரிகள் கூறிய போது, ஆங்காங்கே செல்லும் பாம்பை ஆடைக்குள் போட்டுக்கொள்ள வேண்டாமென அதற்கு இணங்காமை ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மைத்திரியின் இந்த செயற்பாடு பொறுப்புக்களை புறந்தள்ளியதை காண்பிக்கிறது. இது தொடர்பில் அவர் குற்றவியல் பொறுப்புகூற வேண்டும். குற்றவியல் வழக்கு தொடர சட்டமா அதிபர் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அது தொடர்பில் சட்டமா அதிபரோ, அரசாங்கமோ செயற்படாமை குறித்து எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதியை பாதுகாப்பது, அரசாங்கத்துடன் தொடர்புடைய உயரதிகாரிகள் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தமக்குள்ள தொடர்பு வெளிப்படும் என்ற அச்சத்தினாலா என்று பொதுமக்களிற்கும், எமக்கும் சந்தேகம் உள்ளது.

இந்த நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் பெற்றுக்கொண்டுள்ள நட்சத்திர அதிகாரம் பொருந்தியவரா இந்த செயற்பாட்டின் பின்புலத்தில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

தற்போதைய பொலிஸ்மா அதிபர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் குருதிக்கு பொறுப்பு கூற வேண்டும். அவர் அதிலிருந்து விடுபட இயற்கை இடமளிக்காது.

முன்னாள் ஜனாதிபதி மைத்தரியினால் விடுதலை செய்யப்பட்ட இருவருக்கும், சஹ்ரானிற்குமிடையிலிருந்த கொடுக்கல் வாங்கல் பற்றிய மேலதிக விசாரணையை ஆணைக்குழு கோரியுள்ளது.

குண்டுதாரி ஜமீலுடன் புலனாய்வு பிரிவினர் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் வினவப்பட்டுள்ளது.

சார தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரையில்லை. இந்த சாட்சியங்கள் மறைக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்த தாக்குதலிற்கு சஹ்ரான் காசிமும், சில முஸ்லிம்களும் காரணம் என தீரமானித்த அரசும், சட்டமா அதிபர் திணைக்களமும் அதற்கு அப்பால் சென்று விசாரிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தல் மேடையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மர்மங்களை கண்டறிந்து, நீதியை நிலைநாட்டுவதாக கூறி, தேர்தலிற்கு சென்று, இன்று நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியாளர்கள், அனைத்து வாக்குறுதிகளையும் புறம்தள்ளி, ஜனாதிபதி ஆணைக்குழ தகவல்களையும் மறைத்து, உண்மை அம்பலமாவதை தடுக்க இதுவரை மேற்கொள்ளும நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

இந்த மிகப்பெரிய குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் விரைவில் அதற்குரிய விளைவை எதிர்கொள்வார்கள் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்