கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன்,தனது சட்டத்தரணி ஊடாக ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஏப்ரல் 15, 2022 அன்று செய்தியாளர் மாநாட்டில் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை, தனது நற்பெயருக்கு கேடு விளைவிப்பவை என்றும், அதற்கு மன்னிப்பு கோராவிட்டால், நட்டஈடு கோரி வழக்கு தொடர்வேன் என்றும் அறிவித்துள்ளார்.
அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கடந்த வருடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதிக்கு விஜயம் செய்த T7JSH இலக்கம் கொண்ட ஜெட் விமானத்தின் உரிமையாளர் கனநாதன் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
மேலும், கனந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும் அவர் உகாண்டாவில் உள்ள சிலோன் கபேயின் உரிமையாளர் என்றும் கூறிய ஹிருணிகா, விடுதலைப் புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் கனநாதனிடம் இருந்ததாகவும் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை, இட்டுக்கட்டப்பட்டவை என்றும், மலிவான அரசியல் ஆதாயம் மற்றும் உள்நோக்கத்துக்காக சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கள், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவை என சட்டத்தரணி ஊடாக அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தகுந்த மன்னிப்புடன் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் அல்லது ரூ.500,000,000/- செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “எனது வாடிக்கையாளர் தடைசெய்யப்பட்ட அமைப்பான L.T.T.E. உறுப்பினர் என்றும், L.T.T.E யிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை வைத்திருப்பதாகக் கூறுவது பொய் என்பதை தெரிவிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறேன்.
“நீங்கள் கூறப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடப்பட்ட தனியார் ஜெட் விமானத்தின் உரிமையாளர் எனது வாடிக்கையாளர் என்றும், அவர் அத்தகைய நான்கு ஜெட் விமானங்களின் உரிமையாளர் என்றும் கூறுவதும் பொய்யானது என்பதை தெரிவிக்குமாறு உங்களுக்குத் அறிவுறுத்தப்படுகிறேன்.”
“எனது வாடிக்கையாளருக்கு உகாண்டாவின் கம்பாலாவில் உள்ள ‘சிலோன் கஃபே’ உடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவிக்க உங்களுக்கு மேலும் அறிவுறுத்துகிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.