ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முடிவு செய்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) மாலை 3.30 மணிக்கு சந்திப்பிற்கான நேரமும் ஒதுக்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு ரெலோவின் அரசியல்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களின் பின்னர், ஜனாதிபதி கோட்டாபயவின் அழைப்பை ஏற்பதில்லையென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனால், இரா.சம்பந்தனிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் பேச்சிற்கு செல்வது, சர்வதேச அழுத்தங்களிலிருந்து அரசாங்கத்தை பிணையெடுப்பதாகும், அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் நல்லெண்ண சமிக்ஞையை அரசு வெளிப்படுத்திய பின்னர் பேச்சில் கலந்து கொள்ளலாமென ரெலோ தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் கூட்டமைப்பின் ஏனைய தரப்பினர் கலந்து கொண்டாலும், தாம் கலந்து கொள்ளப் போவதில்லையென ரெலோ தலைமை தமிழ்பக்கத்திடம் உறுதி செய்தனர்.