அப்பிள், திராட்சை, ஒரேஞ்ச் பழங்களை சாப்பிட்டு விட்டு இருட்டில் இருப்பதா அல்லது முன்னுரிமைகளை இனங்கண்டு மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணிச் செலவை முதன்மைப்படுத்துவதற்கு தியாகம் செய்வதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முன்னுரிமைகளை கருத்தில் கொள்ளாமல், நீர், அப்பிள், திராட்சை, ஒரேஞ்ச் போன்றவற்றை இறக்குமதி செய்கிறோம். ஆனால், எரிபொருளின்றி இருக்கிறோம். தேனை இறக்குமதி செய்துள்ளோம், போதிய மருந்துகள் இல்லை, என்றார்.
தேவையற்ற செலவினங்களைக் குறைத்து, சிக்கனமாக நிர்வாகம் செய்தால், தடையின்றி எரிபொருளை வழங்குவதை உறுதிசெய்யும் திறன் நம்மிடம் உள்ளது. அதன் மூலம் நாடு தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய முடியும்.
நாடு எதிர்கொள்வது மின்சார நெருக்கடியோ அல்லது எரிபொருள் நெருக்கடியோ அல்ல, மாறாக அந்நியச் செலாவணி நெருக்கடிதான் என்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்கம் கடந்த ஆண்டு (2021) இறக்குமதிக்காக 21 பில்லியன் டொலர் செலவிட்டது, அதில் 2.8 பில்லியன் டொலர் எரிபொருள் இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.




