மியான்மர் ஆட்சிக்குழுத் தலைவர் மின் ஆங் ஹ்லேங்கின் சொத்துக்களை முடக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் அவர் மீது பொருளாதாரத் தடை விதித்ததோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் விசா தடைப்பட்டியலிலும் இணைத்துள்ளது.
இராணுவ புரட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான சதி மற்றும் ஒடுக்குமுறை தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
“தளபதி மின் ஆங் ஹ்லேங் நேரடியாக இராணுவத்தின் செயல்பாடுகள் தொடர்பான முடிவெடுப்பதில் ஈடுபட்டுள்ளார். ஜனநாயகம் மற்றும் மியான்மரில் சட்டத்தின் ஆட்சியைக் வீழ்த்தும் செயலில் ஈடுபடுவதோடு, போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விடுகிறார்” என்று தடைக்கான காரணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 1’ஆம் திகதி அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இராணுவம் மேற்கொள்ளும் கொடூரமான ஒடுக்குமுறைக்கு இராணுவத் தலைவர் நேரடியாகப் பொறுப்பேற்றுள்ளார் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
27 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், மேலும் ஒன்பது மூத்த இராணுவ அதிகாரிகளையும் மியான்மரின் தேர்தல் ஆணையத்தின் தலைவரையும் இந்த தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த பட்டியல்கள் இன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகர்களால் அங்கீகரிக்கப்பட்டது. மியான்மரில் இராணுவ ஆட்சி மாற்றத்தின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் அரசியல் தலைவர் ஆங் சான் சூகியை இராணுவம் வெளியேற்றியதில் இருந்து, மியான்மர் கடும் கொந்தளிப்பில் உள்ளது. வன்முறை மற்றும் பயமுறுத்தும் பிரச்சாரத்துடன் பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை நசுக்க முயற்சித்தாலும், மக்கள் தொடர்ந்து இராணுவத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.




