இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கேரள கஞ்சா, நாகப்பட்டினம் பகுதியில் சிக்கியுள்ளது.
நாகப்பட்டினம் காவல் கண்கானிப்பாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புத்தூர் அண்ணாசிலை அருகில் நேற்று முன்தினம் ( 01) காலை 7 மணியவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 500 கிலோகிராம் கேரளா கஞ்சா சிக்கியது.
TN05 AB 8974 இலக்கமுடைய உமி ஏற்றி வந்த பாரவூர்தியை சோதனை செய்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா சிக்கியது.
வாகனத்தில் இருந்த தேனியை சேர்ந்த மணிவாசகம் மற்றும் அலெக்ஷ் பாண்டியன், ஆரணியை சேர்ந்த உமாபதி, முத்துபேட்டையை சேர்ந்த ஸ்ரீரங்கேஸ்வரன், அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிங்காரவேல் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து TN 12 J 1701 இலக்கமுடைய Swift கார் , Py01 CR 8157 இலக்கமுடைய TATA TIGO காரும் கைப்பற்றப்பட்டது.
கைதானவர்களும், வாகனங்களும் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு , நகர காவல்நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவை சந்திரசேகர் ஆந்திராவிற்கு கொண்டு சென்று, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.




