‘ஜென்டில்மேன் 2’ படத்தின் இசையமைப்பாளராக எம்.எம்.கீரவாணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து 1993 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜென்டில்மேன்’. இப்படத்தில் மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். ஷங்கரின் முதல் படமான இதனை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஹ்மான் இசையில் பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கே.டி.குஞ்சுமோன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘ஜென்டில்மேன் 2’ படத்துக்கு இந்திய சினிமாவின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் ஒரு ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அவர் யாரென்று சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்துக்கு ‘பாகுபலி’ ‘நான் ஈ’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.