அமெரிக்க, சீன ஜனாதிபதிகள், அந்த இரு நாடுகளுக்கு இடையே சர்ச்சைகளைத் தவிர்ப்பதில் தங்களுக்குப் பொறுப்புண்டு என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி சி சின்பிங்கும் இணையம் வழியே இன்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு சுமார் நாலு மணிநேரம் நீடித்தது.
தைவான், மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
“ஒரே சீனா” கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பதாக பைடன் கூறினார்.
தைவானின் சுதந்திர ஆதரவுப் படையினர் எல்லை மீறினால், உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜி குறிப்பிட்டார்.
தேவைப்பட்டால், வலுக்கட்டாயமாகத் தைவான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று சீனா முன்னர் சூளுரைத்திருந்தது.
மனித உரிமை விவகாரங்களைப் பொறுத்தவரையில், சின்ஜியாங் உய்குர்கள், திபெத், ஹொங்கொங் ஆகியவற்றில் பெய்ச்சிங் நடந்துகொள்ளும் முறை பற்றி பைடன் கவலை தெரிவித்தார்.
எரிசக்தி, பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இணைந்து செயல்படத் தலைவர்கள் உறுதியளித்தனர்.
இரு நாட்டு ஜனாதிபதிகளின் இணையச் சந்திப்பு ஆக்கபூர்வமாகவும், பயனுள்ள வகையிலும் அமைந்ததாகச் சீனாவின் சின்குவா ஊடகம் குறிப்பிட்டது.
அமெரிக்க அதிகாரிகளும் அதே கருத்தைப் பிரதிபலித்தனர்.
அமெரிக்காவும், சீனாவும் உறவை இனி எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்பதில் கவனம் செலுத்துகின்றன.



