கோவிட் தாக்கமே சில பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணம். வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பபடும் என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் சிறிலங்கா பெதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடன் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தாக்கம் தான் சில பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கோவிட் தாக்கம் அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே சவாலக உள்ளது. ஆனால் நாங்கள் வளர்முக நாடு. இங்கு 75 வீதத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் வரும் போது இது முழுமை பெறும் நிச்சயமாக கோவிட் தொற்றில் இருந்து மேலே வர முடியும். அதன்போது மக்கள் தற்போது எதிர்நோக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வர இருக்கின்ற வரவு செலவுத்திட்டம் உட்பட அனைத்திலும் நிதி அமைச்சர் சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார். கிராம மட்டங்களில் இருந்து கிராமிய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்குமே அதிக நிதி ஒதுக்கப்படவுள்ளது. விவசாயம், மீன்பிடி, கால்நடை, சிறுபொருளாதார பயிற்செய்கை மேம்பாடு போன்ற விடயங்களுக்கே அதிக நிதி ஒதுக்கப்படவுள்ளது. முன்னர் இருந்தது போல் கட்டுமாணப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படமாட்டாது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலேயே நிதி ஓதுக்கீடு வரவு செலவுத் திட்டத்தில் அமையும்.
மேலும், அதிபர், ஆசிரியர்களுடைய சம்பளப் பிரச்சனை மற்றும் அவர்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் புறம் தள்ளவில்லை. அதில் நியாயப்பாடுகள் இருக்கின்றன. இருந்த போதிலும் தற்போதைய இக்கட்டான நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்தநிலையில் இவர்களுடைய பிரச்சனையை அணுகுவது சவாலான விடயம். இருந்தாலும் அவர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தப் பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்படும்.
தற்போது அரசாங்கம் மீது குற்றம் சாட்டும் எதிர்கட்சியினரின் கடந்த நான்கரை வருட கால ஆட்சியில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்தவர்கள். தற்போதைய பிரதமர் ஜனாதிபதியாகவும், தற்போதைய நிதி அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த காலத்தில் பல அபிவிருத்திகள், உட்கட்டமைப்பு வசதிகள் இடம்பெற்றன. வடக்கு, கிழக்கு பெரும்பான்மையான மக்கள் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெருமளவு ஆதரவு வழங்கினார்கள்.
அதுமட்டுமல்ல, தமிழ் தலைமைகள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம், பிரதமருக்கு எதிரான நம்பக்கையில்லா தீர்மானம் எல்லவாற்றுக்கும் ஆதரவு வழங்கினார்கள். அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கினார்கள். அப்போது வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி சார்ந்து என்ன முன்னேற்றமும் இல்லை. மக்களுக்கு இருந்த நீண்ட கால பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தும் எதுவும் நடைபெறவில்லை. எதிர்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். தடுப்பூசி கொண்டு வராத போது அதனை விமர்சித்தார்கள். கொண்டு வந்து தடுப்பூசி வழங்கும் போது அதனை விமர்சிக்கிறார்கள். ஆகவே இவர்களது நோக்கம் தாங்கள் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே. அரசாங்கம் நல்லது செய்தாலும் அதனை பிழையாக காட்டி பேசுகிறார்கள்.
இந்த நாட்டை கொடிய நோயில் இருந்து காப்பற்ற ஆலோசனை கேட்டோம். ஆனால் நல்ல விடயங்களை பிழை என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எமது நாடு தடுப்பூசி போடுவதில் முன்னேற்றம் கண்டுள்ளது. பாடசாலை திறக்க வேண்டும் என அரசாங்கம் முயல்கிறது. ஆனால் இன்னும் 5 வருடத்திற்கும் பாடசாலை மூடலாம் என எதிர்கட்சி எண்ணுகிறது. ஆகவே கோவிட் தொற்றில் இருந்து நாடு மீண்ட பின் பல ஆக்கப்பூர்வமான விடயங்களை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குரிய நீதி, நியாயம் கிடைக்க வேண்டும். அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய உடனடி கருமங்களை நாம் செய்ய வேண்டும். மூன்று தலைமுறை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப தீர்வு கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.