கடந்த 2000-2021 வரையான இருபது வருட காலப்பகுதியில் ஏறத்தாழ ஆறாயிரம் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விபரக் கோவையைத் தற்போது ஒப்புநோக்கி உறுதிப்படுத்தி வெளியிட இருப்பதாக இலங்கை அரசின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஜெனீவா ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கைக்கு முன்பதாகத் தகவல் வழங்கியிருக்கிறார். அதுவே குறைந்த ஒரு எண்ணிக்கை. அதைக்கூட நான்காயிரத்துக்கும் அல்லது அதற்கும் குறைவாகக் காட்ட முனையும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அவர் ஆரம்பித்திருப்பதை எவ்வாறு மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிக்கமுடியும் என்று நேற்று 2021 செப்ரம்பர் 15ம் திகதி புதன்கிழமை காட்டமான திறந்த மடல் ஒன்றை வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு உயர்ஸ்தானிருக்கு அனுப்பிவைத்துள்ளது.
ஆங்கில மொழியில் இரண்டுபக்கங்களில் வரையப்பட்ட அந்த மடலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டவையும், கோரிக்கையாக முன்வைக்கப்பட்டவையுமான விபரங்களின் சுருக்கம் வருமாறு:
இலங்கை அரசு திட்டமிட்ட இன அழிப்பையே வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந் துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே கடந்த இருபது வருடங்களுக்குள் மாத்திரம் குறைந்தது 15,000 தமிழர்கள் அரச படைகளினாலும் அவர்களால் இயக்கப்பட்டவர்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்பது மட்டுமல்ல 95 வீதமானோர் 16 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் ஆவர். இது ஒரு திட்டமிட்ட இன அழிப்புச் செயல். இந்தத் தொகையைக் குறைத்துவிட இலங்கை அரசு முயற்சிக்கிறது. இதை எவ்வாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் பீரிஸை ஆமோதிப்பதன் மூலமும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகப் பொறி முறையை வரவேற்பதன் மூலமும் அங்கீகரிக்கமுடியும்?
இதற்கும் அப்பால், ஆறுமாதங்களுக்கு முன்னர் உள்ளகப் பொறிமுறை படுதோல்விகண்டுவிட்டது, எனவே ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று போன்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறைகள் ஊடாக விசாரிக்க ஆவன செய்யவேண்டும் என்று கடுமையாகப் பிரேரித்து விட்டு அடுத்த சில மாதங்களுக்குள் தீவில் மனித உரிமைகள் சீரழிந்து செல்லும் நிலையிலும் கொழும்பு அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை ஆமோதிக்கும் நிலையை உயர்ஸ்தானிகர் எவ்வாறு கைக்கொள்ளலாம்?
இலங்கை அரசிடம் ஐ.நா. தன்னிடமிருக்கும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறையீடுகளை ஏன் ஒப்படைத்தது? இது உறவினர்களுக்கு ஆபத்தானது. இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவைத்து, ஐ.நா. மேற்பார்வையில் இங்கு பாதுகாப்பை உறுதி செய்தால் மாத்திரமே காணாமலாக்கப்பட்டோரின் விபரங்களை முழுமையாகத் திரட்டமுடியும்.
காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை மூலம், அதுவும் இன அழிப்புக் குறித்த பார்வையுடனான விசாரணைக்கு உள்ளடக்கப்பட்டதாக, மியான்மார் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்குக் கையாண்ட அதியுச்ச நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்து அணுகப்பட வேண்டும்.
எனவே, மனித உரிமைப் பேரவையின் அதியுச்ச நிகழ்ச்சிநிரல் நான்குக்குள் இலங்கையைக் கொண்டுவந்து அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று தீர்க்கமாகக் கோருகிறோம்.
இன அழிப்புக் குறித்த உண்மையைக் கண்டறியும் பணிக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என்றும் கோருகிறோம்.